தமிழகத்தில் தள்ளுவண்டியில் உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் உரிமையாளர்கள் அனைவரும் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம், 2006-இன் கீழ், உணவுப் பாதுகாப்புத் துறையிடமிருந்து முறையான உரிமத்தை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும் என தமிழக உணவுப் பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது.
சமீப காலமாக, மாநிலம் முழுவதும் தள்ளுவண்டி உணவு வணிகம் அதிகரித்துள்ள நிலையில், குறிப்பாக கடற்கரைகள், பூங்காக்கள் மற்றும் பொழுதுபோக்கு இடங்களில் விற்கப்படும் உணவுப் பொருட்களின் தரம் மற்றும் சுகாதாரப் பராமரிப்பு குறித்து அதிக அளவில் புகார்கள் பெறப்பட்டதன் அடிப்படையில் இந்த முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பானிபூரி, சமோசா, ரவா லட்டு, சிப்ஸ், போண்டா, சூப், மீன், வறுத்த கறி, சிக்கன் பகோடா உட்பட, காலை, மதியம், இரவு நேரங்களில் தள்ளுவண்டியில் வைத்து விற்கப்படும் அனைத்து உணவுப் பொருட்களுக்கும் இந்த உரிமம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தள்ளுவண்டி வைத்து உணவுப் பொருட்கள் விற்பனை செய்பவர்களுக்கு இந்த உணவுப் பாதுகாப்புத் துறை உரிமம் இலவசமாக வழங்கப்படும்.
உரிமத்தைப் பெற விரும்புவோர் ஆன்லைன் மூலமாகவோ அல்லது இ-சேவை மையங்கள் மூலமாகவோ விண்ணப்பித்து, அதற்கான பதிவிறக்க நகலை பெற்றுக் கொள்ளலாம்.
உரிமம் பெறாமல் உணவுப் பொருட்களை விற்பனை செய்தாலோ அல்லது தரமற்ற உணவுப் பொருட்களை விநியோகம் செய்தாலோ, சம்பந்தப்பட்ட தள்ளுவண்டி கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கி, அபராதம் விதித்து, கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழக உணவுப் பாதுகாப்புத் துறை எச்சரித்துள்ளது.
மேலும், தள்ளுவண்டி கடைகளில் உணவுப் பாதுகாப்பு விதிகளின்படி தரநிலைகள் பின்பற்றப்படுகின்றனவா என்பதை உறுதிசெய்ய, மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர்கள் மூலம் முறையான ஆய்வுகளை மேற்கொள்ளவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவானது, உணவுப் பாதுகாப்பை மேம்படுத்தி, பொதுமக்களுக்கு சுகாதாரமான உணவு கிடைப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டது.