தமிழகம் முழுவதும் கிராமங்களில் கால்நடைகளுக்கு தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. குறிப்பாக தலைநகரமான சென்னையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சென்னையை சுற்றியுள்ள முக்கிய ஏரிகளான செம்பரம்பாக்கம், புழல், சோழவரம் ஆகிய ஏரிகள் வறண்டு காணப்படுகின்றன. இதுமட்டுமில்லாமல் தமிழகத்தின் மற்ற மாவட்டங்களிலும் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. மக்கள் கூட அங்கே இங்கே திரிந்து அலைந்து எங்கேயாவது இருந்து தண்ணீர் பெறுகின்றனர். ஆனால் சில இடங்களில் கால்நடைகள் தண்ணீர் கிடைக்காமல் கடும் சிரமப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் கிராமங்களில் கால்நடைகளுக்கு தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. தண்ணீர் தட்டுப்பாட்டால், மக்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்னைகள், கால்நடைகள் எந்தளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளன என்பது குறித்து இன்று காலையிலிருந்து புதிய தலைமுறை தொடர் நேரலையாக செய்திகளை வெளியிட்டு வருகிறது.
அதன் எதிரொலியாக புதிய தலைமுறையை தொடர்பு கொண்ட கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், கிராமங்களில் கால்நடைகளுக்கென தண்ணீர்த் தொட்டிகள் அமைக்கப்படும் என்று கூறினார். இது தொடர்பாக, மாவட்ட கால்நடைத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.