தமிழ்நாடு

முடிவுக்கு வருமா விவசாயிகள் போராட்டம்?

முடிவுக்கு வருமா விவசாயிகள் போராட்டம்?

webteam

டெல்லியில் போராடிவரும் விவசாயிகள் மத்திய அமைச்சர்களை சந்திக்க தமிழக அரசு ஏற்பாடுகளை செய்துள்ளது.

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் 15-ஆவது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராடி வரும் விவசாயிகளை பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் நேரில்சந்தித்து ஆதரவு தெரிவித்து வந்தனர். ஆளும்கட்சி சார்பில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தலைமையில் அதிமுக எம்பிக்கள் விவசாயிகளை கடந்த ஒருவாரத்துக்கு முன் நேரில் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தனர். மத்திய அமைச்சர்களை நேரில் சந்திக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும், அதைஏற்று போராட்டத்தைக் கைவிடவும் வலியுறுத்தினர். ஆனால், அவர்களின் வேண்டுகோளை ஏற்க மறுத்து விவசாயிகள் போராட்டத்தினை தொடர்ந்தனர்.

திமுக எம்பி கனிமொழி, திருச்சி சிவா, கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பில் டி.ராஜா, டி.கே.ரங்கராஜன் ஆகியோரும் விவசாயிகளுக்கு, தங்களது ஆதரவினை தெரிவித்தனர். விவசாயிகள் போராட்டத்தின் எதிரொலியாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்த கூட்டத்தில் தமிழகத்துக்கு வறட்சி நிவாரண நிதியாக ரூ.1,173.78 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால், இது யானைப் பசிக்கு சோளப்பொரி போன்றது என்று கூறி விவசாயிகள் போராட்டத்தினை கைவிட மறுத்து விட்டனர்.

நடிகர்கள் பிரகாஷ் ராஜ், விஷால் போன்றோரும் விவசாயிகளை நேரில் சந்தித்ததோடு, இதுதொடர்பாக நிதியமைச்சர் அருண் ஜேட்லி மற்றும் சாலைப்போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்கரி ஆகியோரை சந்தித்து பேசினர். இந்தநிலையில், டெல்லியில் போராடிவரும் தமிழக விவசாயிகள் மத்திய அமைச்சர்களை நாளை மறுநாள் சந்திக்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. விவசாயிகளுடன், தமிழக விவசாயத்துறை அமைச்சர் துரைக்கண்ணுவும் மத்திய அமைச்சர்களை சந்திக்க இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.