தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் Pt web
தமிழ்நாடு

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்.. ரூ.755 கோடி நிதி ஒதுக்கீடு.. தமிழக அரசு அறிவிப்பு!

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்துக்கு ரூ.755 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும், இத்திட்டம் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளான செப்டம்பர் 15-ம் தேதி முதல் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Premkumar S

தமிழ்நாடு சட்டப்பேரவையில் வென்று முதன்முறையாக தேர்தலில் போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெருங்கட்சியாக வெற்றி பெற்றிருக்கும் நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜய் தமிழகத்தின் முதல்வராக கடந்த மே மாதம் 10-ம் தேதி பதவியேற்றுக் கொண்டார். தொடர்ந்து, தவெகவின் தேர்தல் வாக்குறுதிகளில் கொடுத்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை மற்றும் 200 யூனிட் இலவச மின்சாரம் மற்றும் மாவட்டம் தோறும் போதைப்பொருள் தடுப்பு பிரிவுகள் உள்ளிட்ட திட்டங்களுக்கு அன்றைய தினமே கையெழுத்திட்டிருந்தார். அதேசமயம், தமிழக அரசுக்கு 10 லட்சம் கோடிக்கு மேல் கடன் இருப்பதாகவும், விரைவில் நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியிட இருப்பதாகவும், வாக்குறுதிகளை நிறைவேற்ற தங்களுடைய அரசுக்கு சிறிது காலம் கால அவகாசம் கொடுக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.

விஜய்

இந்தசூழலில் தான், தவெக அரசு ஆட்சியமைத்து 40 நாட்களைக் கடந்திருக்கிறது. சமீபத்தில் தவெக வெள்ளை அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்த திட்டங்களை நிறைவேற்றாமல் இருப்பதற்கு காரணத்தை தமிழக அரசு தேடுவதாக எதிர்கட்சிகள் குற்றஞ்சாட்டியிருந்தனர். அதேசமயம், தமிழக அரசு 10 லட்சம் கோடி கடனில் இருக்கும் நிலையில், தவெக அனைத்துப் பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச பயணம், அண்ணன் சீர், தாய்மாமன் தங்கமோதிரம் திட்டம் உள்ளிட்ட மேலும் பல தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது கடினம் என அரசியல் நோக்கர்கள் பலரும் தெரிவித்து வருகின்றனர்.

இந்தசூழலில் தான், முதல்வர் விஜயின் 52 வது பிறந்த நாள் விழா தமிழகம் முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், தவெகவின் தேர்தல் வாக்குறுதிகளின் ஒன்றான தாய்மாமன் சீர் திட்டத்துக்கு 755.83 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது குறித்தான அறிவிப்பில், தமிழர் பாரம்பரியத்தில் "தாய்மாமன் சீர் என்ற மரபின்படி, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள். தாயின் சகோதரர் தாய்மாமன் பங்கை ஏற்று, அரசு மருத்துவமனைகளில் புதிதாகப் பிறந்த குழந்தையை வரவேற்று வாழ்த்தும் வகையில் தங்கள் உள்ளிட்ட பரிசுகளை வழங்கும் விதமாகவும் தமிழர் பண்பாட்டு மரபை பிரதிபலிக்கும் வகையிலும், அரசு ஒவ்வொரு குழந்தைக்கும் அன்பும் அக்கறையும் நிறைந்த வரவேற்பின் அடையாளமாக ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது.

இத்திட்டத்தை மாநிலத்தில் செயல்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் ₹755.83 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்கிறது. இத்திட்டற்கான ஒப்பந்த புள்ளிகள் உடனடியாக கோருவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்கள். இத்திட்டத்தின் கீழ், 22 ஜூன் 2026 முதல் அரசு மருத்துவ மனைகளில் பிறக்கும் குழந்தைகள் பயன் பெறுவார்கள். "தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்" பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15, 2026 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் விஜயால் துவக்கி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது