தமிழ்நாடு

விவசாயிகளுக்கு நிதி உதவி அளிக்கும் திட்டம்: அரசாணை வெளியீடு

விவசாயிகளுக்கு நிதி உதவி அளிக்கும் திட்டம்: அரசாணை வெளியீடு

webteam

மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி, சிறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி அளிக்கும் திட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்துவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

2 ஹெக்டேர் வரை நிலம் உள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 3 தவணையாக மொத்தமாக ரூ.6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவித்துள்ளது. மத்திய அரசின் நிதியுதவித் திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 12 கோடியே 56 லட்சத்து 35 ஆயிரம் விவசாயிகள் பயன்பெறுவர் எனப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 

அதாவது, நாட்டிலுள்ள மொத்த விவசாயிகளில் 86 சதவிகிதத்தினர் இந்தத் திட்டத்தால் பயனடைவர். தமிழகத்தைப் பொருத்தவரை இந்தத் திட்டத்தின் மூலம் 73 லட்சத்து 43 ஆயிரம் விவசாயிகள் பயன்பெறுவார்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

அதன்படி படி அத்திட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்துவதற்காக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் 2018ம் ஆண்டு டிசம்பர் ஒன்றாம் தேதியைக் கணக்கிட்டு இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 தவணைகளாக நிதி உதவி அளிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. 

இத்திட்டத்தைக் கண்காணிக்க வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால் மற்றும் வேளாண்துறை முதன்மைச் செயலாளர் ககன் தீப் சிங் பேடி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.