தேசிய கல்விக் கொள்கை 2020 மற்றும் PM SHRI திட்டத்தை ஏற்கவேண்டும் என்று மத்திய அரசு பல நாட்களாக அழுத்தம் கொடுத்துவருகிறது. ஆனால், மும்மொழிக்கொள்கை, இந்தி திணிப்பு, குலக்கல்வி உள்ளிட்டவற்றை காரணம் காட்டிய தமிழக அரசு தேசிய கல்விக்கொள்கையை ஏற்க முடியாது என்று திட்ட வட்டமாக தெரிவித்து வருகிறது.
இதனால், புதிய கல்விக்கொள்கையை ஏற்றால்தான், சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிதியை தர முடியும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார்.
ஆனால், மத்திய அரசின் இந்த நிபந்தனைக்கு தமிழ்நாடு உட்படாது எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதனை சட்டரீதியாக எதிர்கொள்வோம் எனவும் தெரிவித்தார்.
சமீபத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் எழுதிய ‘தேசிய கல்விக் கொள்கை 2020 எனும் மதயானை’ புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் கூட “மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் சேரவேண்டிய கல்வி நிதியை தங்களுடைய அரசியலுக்காக மத்திய அரசு தடுத்து நிறுத்தியுள்ளது. இதற்கு எதிராக நிச்சயமாக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரும்” என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், தமிழ்நாடு கல்வி நிதி ரூ.2,291 கோடியை விடுவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது.
அந்த மனுவில், புதிய கல்வி கொள்கை, சமக்ரா சிக்ஷா திட்டங்களின் கீழ் வழங்க வேண்டிய நிதி வழங்கப்படவில்லை எனவும் தேசிய கல்விக்கொள்கையை ஏற்றால்தான் ரூ.2291 கோடி நிதி தரப்படும் என மத்திய அரசு கூறுவது சட்டவிரோதம் என தமிழ்நாடு அரசு குற்றம் சாட்டியுள்ளது.
மேலும், சமக்ரா திட்டத்துக்கான நிதியை 6% வட்டியுடன் ரூ. 2,291 கோடி வழங்க உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு அரசு வலியுறுத்தி உள்ளது.