புதிய தலைமைச் செயலக முறைகேடு வழக்கை லஞ்ச ஒழிப்பு துறைக்கு மாற்றிய அரசாணை ரத்து செய்ததை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது
புதிய தலைமைச் செயலக கட்டுமான முறைகேடு தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம் கலைக்கப்பட்ட நிலையில், இதில் குற்றவியல் விசாரணை நடத்தலாம் என நீதிமன்றம் தெரிவித்தது. இந்நிலையில், விசாரணை ஆணையம் திரட்டிய ஆவணங்களை, லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றி கடந்த செப்டம்பர் மாதம் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதுதொடர்பாக, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தவும் தமிழக அரசு உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து திமுக தலைவர் ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன் உள்ளிட்டோர், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா புதிய தலைமைச் செயலக விவகாரத்தை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றும் அரசாணையை ரத்து செய்வதாக உத்தரவிட்டார்.
இந்நிலையில் அரசாணை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. மேலும் மனு மீதான விசாரணையை தள்ளிவைக்க அரசு கோரியக்கையும் விடுத்தது. அரசின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் அமர்வு , மூன்று வாரங்களுக்கு விசாரணையை தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளது.