தமிழ்நாடு

ஆறு பொருள்கள் ‌அடங்கிய சிறப்பு பொங்‌கல் பரிசு - முதல்வர்

ஆறு பொருள்கள் ‌அடங்கிய சிறப்பு பொங்‌கல் பரிசு - முதல்வர்

webteam

பொங்கல் திருநாளை கொண்டாடும் வகையில் 6 பொருள்கள் ‌அடங்கிய சிறப்பு பொங்‌கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் எ‌ன முதலைமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழர்களின் முக்கிய பண்டிகையாக கொண்டாடப்படுவது தைப் பொங்கல். தை1ம் தேதி கொண்டாடப்படும் இப்பண்டிகை போகி, பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என தொடர் பண்டிகையாக கொண்டாடப்படும். நகரங்களைக் காட்டிலும் கிராமப்புறங்களில் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படும். ஜல்லிக்கட்டு, ரேக்ளா ரேஸ் போன்ற பல விளையாட்டு போட்டிகளை நடத்தி பொங்கல் பண்டிகையை தமிழகத்தின் பல பகுதிகளில் திருவிழாவாக கொண்டாடுவர்.

இந்நிலையில் பொங்கல் திருநாளை கொண்டாடும் வகையில் 6 பொருள்கள் ‌அடங்கிய சிறப்பு பொங்‌கல் பரிசுத் தொகுப்பை தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக அவர் முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்‌,‌ புதுஅரிசி‌ கொண்டு பொங்கலிடும் நன்னாளில் அனைவரின் வாழ்வில் அன்பும், அமைதியும், மகிழ்ச்சியும் பெருக வாழ்த்துவதாக தெரிவித்துள்ளார். 

பொங்கலை சிற‌ப்பாகக் கொண்டாடும் வகையில் ஒருகிலோ பச்சரிசி, ஒரு‌ கிலோ சர்க்கரை, இரண்டு அடி‌ நீளக் கரும்புத்துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை மற்றும் 5 கிராம் ஏலக்காய் அடங்கிய சிறப்பு பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். 

இந்தப் பொங்கல் சிறப்பு பரிசுத்தொகுப்பு அனைத்து குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் முகாம்களில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கு வழங்கப்படும் எனவும் பொங்கல் திருநாளுக்கு முன்பாக நியாய விலைக் ‌கடைகள் மூலம் வழங்கப்படும்‌ எனவும் மு‌தலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்