தமிழ்நாடு

தமிழக அரசு ஊழியர்களின் ஊதியம் உயர வாய்ப்பு

தமிழக அரசு ஊழியர்களின் ஊதியம் உயர வாய்ப்பு

webteam

தமிழக அரசு அலுவலர்களின் ஊதியங்களை மாற்றியமைக்க 5 பேர் கொண்ட குழுவினை அமைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின் அடிப்படையில் தமிழக அரசு அலுவலர்களின் ஊதிய விகிதங்களை மாற்றியமைப்பது குறித்து இந்த குழுவினர் ஆய்வு செய்து 4 மாதத்துக்குள் அதாவது ஜூன் 30ம் தேதிக்குள் அறிக்கை அளிக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், திருத்திய ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் குறித்தும் இந்த குழுவினர் ஆய்வு மேற்கொள்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், உள்துறை முதன்மை செயலர், பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை செயலாளர் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். குழுவுக்கு உறுப்பினர் செயலாளராக உமாநாத் ஐ.ஏ.எஸ் இருப்பார் என்றும் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் ஆய்வறிக்கை கிடைத்த பின்னர் தமிழக அரசு அலுவலர்களின் ஊதியத்தில் பெரிய அளவிலான மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்கப்படுகிறது.