தூத்துக்குடி web
தமிழ்நாடு

நட்சத்திர தொகுதி| தூத்துக்குடியில் மகுடம் சூடப்போவது யார்..? களநிலவரம் என்ன..?

முத்துநகர் என்று அழைக்கப்படும் தூத்துக்குடி மாவட்டம். இந்த மாவட்டத்தின் தேர்தல் வரலாற்றையும், வெற்றியைத் தீர்மானிக்கும் சமூகக் காரணிகளையும் பார்க்கலாம்.

PT WEB

.2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தின் ஆறு தொகுதிகளிலும் கடுமையான அரசியல் போட்டி உருவாகியுள்ளது. திமுக, அதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் தங்கள் பாரம்பரிய கோட்டைகளை காக்க முயல்கின்றன. நாடார், மீனவர், தேவர், நாயக்கர், ரெட்டியார், பட்டியல் சமூக வாக்குகள் யாருக்கு திரும்பும் என்பது முத்துநகர் மகுடத்தை தீர்மானிக்கிறது.

வரலாற்றுச் சிறப்புமிக்க முத்துக்களும், சுதந்திரப் போராட்ட வீரர்களின் வீரமும் விளைந்த மண் தூத்துக்குடி. தமிழகத்தின் முக்கியத் தொழில் முனையமாகவும், கடல்வழி வணிகத்தின் நுழைவாயிலாகவும் திகழும் இந்த மாவட்டத்தின் சட்டமன்றத் தொகுதிகள், வரும் தேர்தலில் பெரும் அரசியல் மாற்றங்களைச் சந்திக்கும் போர்க்களமாக உருவெடுத்துள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தின் ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தற்போது அரசியல் களம் மிகவும் விறுவிறுப்பாகக் காணப்படுகிறது.

Manappadu Beach

தூத்துக்குடி தொகுதி: மாவட்டத் தலைநகரான தூத்துக்குடி தொகுதியில் திமுகவின் கீதா ஜீவன் தற்போது எம்.எல். ஏ-வாக இருந்தாலும், அங்கு திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் சமபலத்துடன் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. நாடார் மற்றும் மீனவ சமூகத்தினர் இந்தத் தொகுதியின் வெற்றியைத் தீர்மானிக்கும் முக்கியச் சக்திகளாகத் திகழ்கின்றனர்.

திருச்செந்தூர் தொகுதி: அதேபோல், திமுகவின் பலமான கோட்டையாகக் கருதப்படும் திருச்செந்தூர் தொகுதியில் அனிதா ராதாகிருஷ்ணன் வலுவான நிலையில் உள்ளார். நாடார், முஸ்லீம் மற்றும் பட்டியல் சமூகத்தினர் அதிக அளவில் உள்ள இந்தத் தொகுதியில், கடந்த ஐந்து தேர்தல்களில் மூன்று முறை திமுகவே வெற்றிக்கனியைப் பறித்துள்ளது.

Tuitcorin Port

ஸ்ரீவைகுண்டம் தொகுதி: ஸ்ரீவைகுண்டம் தொகுதியைப் பொறுத்தவரை வரலாற்று ரீதியாக காங்கிரஸ் கட்சி ஏழு முறை வென்று தனது பலத்தை நிரூபித்துள்ளது. நாடார் சமூக வாக்குகளே இங்கு வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்யும் நிலையில், கடந்த ஐந்து தேர்தல்களில் மூன்று முறை அதிமுக இங்கு வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஓட்டப்பிடாரம் தொகுதி: பட்டியல் சமூகத்தினர் பெரும்பான்மையாக உள்ள ஓட்டப்பிடாரம் தனித் தொகுதியில் அதிமுக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தலா நான்கு முறை வென்றுள்ளன. புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி இரண்டு முறை வென்ற இந்தத் தொகுதியில், தற்போது திமுக மற்றும் அதிமுக இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.

கோவில்பட்டி தொகுதி: மாவட்டத்தின் மிகவும் எதிர்பார்க்கப்படும் தொகுதியான கோவில்பட்டியில் தேவர் மற்றும் நாயக்கர் சமூகத்தினர் வெற்றியைத் தீர்மானிக்கின்றனர். இங்கு அதிமுக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் மாறி மாறி ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், திமுக இதுவரை ஒருமுறை கூட இந்தத் தொகுதியில் வென்றதில்லை என்பது ஒரு வியக்கத்தக்க உண்மையாக உள்ளது.

Salt producing Centre , Tuitcorin

விளாத்திகுளம் தொகுதி: இறுதியாக, விளாத்திகுளம் தொகுதியில் ரெட்டியார், நாயக்கர் மற்றும் தேவர் சமூகத்தினர் அதிக அளவில் உள்ளனர். வரலாற்று ரீதியாக அதிமுக எட்டு முறை வென்று இங்கு பலமாக இருந்தாலும், கடந்த 2019 இடைத்தேர்தல் மற்றும் 2021 பொதுத்தேர்தல் எனத் தொடர்ந்து இரண்டு முறை திமுக இங்கு வெற்றி பெற்று தனது செல்வாக்கை உயர்த்தியுள்ளது.

இப்படிப் பல்வேறு சமூகப் பின்னணிகளையும் மாறுபட்ட அரசியல் வரலாற்றையும் கொண்ட தூத்துக்குடி மாவட்டத்தின் தேர்தல் களம், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் ஒரு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.