புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தினால்தான் தமிழகத்திற்கான நிதியை ஒதுக்கமுடியும் என்று மறைமுகமாக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிக்கை வாயிலாக தெரிவித்திருந்தார். மேலும், பிஎம்ஸ்ரீ திட்டத்தை ஏற்காததால் தமிழ்நாடு அரசு ரூ.5000 கோடியை இழக்கிறது என்று வீடியோ ஒன்றினையும் வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், திருச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது இந்த விவகாரம் குறித்துப் பேசிய அவர், “கல்வி நிதி வழங்கப்படாத விவகாரத்தில் மாணவர்கள் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். மாணவர்கள் நலனை ஒன்றிய அரசு விரும்பினால் நிபந்தனை விதிக்ககூடாது. இஸ்ரோ உட்பட பல்வேறு துறைகளில் உயர் பதவிகளில் இருப்பவர்கள் தமிழ் வழியில் படித்தவர்கள். தூண்டில் போட்டு மீன் சிக்காதா என நினைக்கிறது ஒன்றிய அரசு.
மீண்டும் ஒரு மொழிப்போரை கொண்டு வந்துவிடக்கூடாது. இந்தி இல்லாமல் மூன்றாவதாக வேறு மொழியைப் பயிற்றுவிக்க போதிய ஆசிரியர்கள் இல்லை. பாடத்திட்டத்திற்கு வெளியே இந்தி மொழியை கற்றுக்கொள்ள ஊக்குவிக்கத்தான் செய்கிறோம். 3 ஆவது மொழி கட்டாயம் எனக்கூறுவது மாணவர்களுக்கு கூடுதல் சுமை” என்று தெரிவித்துள்ளார்.