தமிழ்நாடு

“ஐபிஎஸ் ஆசையே இல்லாதவர்” - திரும்பி பார்க்க வைத்த திரிபாதி கதை 

“ஐபிஎஸ் ஆசையே இல்லாதவர்” - திரும்பி பார்க்க வைத்த திரிபாதி கதை 

webteam

தமிழக டிஜிபியாக பதவி வகித்து வரும் டி.கே.ராஜேந்திரனின் பணிக்காலம் நாளையுடன் முடிவடைகிறது. எனவே அடுத்த சட்டம் ஒழுங்கு ‌டிஜிபியாக ஜே.கே.திரிபாதியை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் 29 வது சட்டம் ஒழுங்கு ‌டிஜிபியாக பதவியேற்கும் திரிபாதியின் பின்னணி குறித்து தெரிந்துகொள்வோம். 

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்து டாக்டர் பட்டம் பெற்ற திரிபாதி ஐபிஎஸ் தமிழக காவல்துறையின் 1985ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி ஆவார். ஐபிஎஸ் அதிகாரி ஆக வேண்டும் என்ற எண்ணம் திரிபாதிக்கு எப்போதுமே இருந்ததில்லையாம். ஐஏஎஸ், ஐஎப்எஸ் இந்த இரண்டில் எதாவது ஒன்றில் வந்தால் போதும் என்றே நினைத்திருக்கிறார். இரண்டு முறை தோல்வியடைந்த திரிபாதி, 3வது முறை ஐபிஎஸ் தேர்வில் வெற்றி பெற்று தமிழக கேடரில் பணி அமர்த்தப்பட்டார். 

இவர் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் எஸ்பியாக பணியாற்றி காவல்துறை சட்டம், ஒழுங்கு பணிகளில் பழுத்த அனுபவம் கொண்டவர். பின்னர் டிஐஜியாக பதவி உயர்வு பெற்று திருச்சியில் பணிபுரிந்தார். அதன்பின் சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்ட இவர், தென்சென்னை இணை ஆணையராக பொறுப்பேற்றார். அதன் பின்னர் நிர்வாகப் பிரிவு, தென்மண்டல ஐஜி, ஆயுதப்படை, கிரைம் ஐஜி, பொருளாதாரக் குற்றப்பிரிவு, காவல்துறை தலைமையிடம், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு எனக் காவல்துறையின் பல்வேறு பிரிவுகளிலும் திறம்பட பணியாற்றி தனி முத்திரை பதித்தார். 

இதனையடுத்து ஏடிஜிபியாக பதவி உயர்வு பெற்ற ஜே.கே.திரிபாதி, சென்னை மாநகர காவல் ஆணையராக இரண்டுமுறை பதவி வகித்தார். பின்னர் சிறைத்துறை ஏடிஜிபியாகவும் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாவும் பணியாற்றினார். மேலும் அமலாக்கப்பிரிவிலும் இவர் பணிபுரிந்துள்ளார். இறுதியாக கடந்த சில மாதங்களுக்கு முன் டிஜிபியாக பதவி உயர்வு பெற்ற இவரை, சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தில் தமிழக அரசு நியமனம் செய்தது. 

திரிபாதி திருச்சி காவல் ஆணையராக பணிபுரிந்தபோது ‘கம்யூனிட்டி போலீசிங்’ எனப்படும் பொதுமக்களுடன் சேர்ந்து பணியாற்றும் உத்தியை காவல்துறையில் அறிமுகப்படுத்தினார். மேலும் ரோந்து காவல் படை, குடிசைப்பகுதிகளை தத்து எடுக்கும் திட்டம் மற்றும் புகார் பெட்டி திட்டம் போன்ற புதிய திட்டங்களை காவல்துறையில் அறிமுகப்படுத்தினார்.  பொதுமக்களுக்கும், காவல்துறைக்கும் இடையே உள்ள நல்லுறவை மேம்படுத்துவதே இந்தத் திட்டங்களின் சாராம்சமாக விளங்கியது. திரிபாதியின் இந்தத் தொலைநோக்குப் பார்வை திட்டங்கள் தான் இன்று தமிழகம் முழுவதும் பின்பற்றப்படுகிறது என்றே கூறலாம். 

சிறைத்துறை ஏடிஜிபியாக பணியாற்றிய போது தமிழகத்தில் உள்ள அனைத்து சிறைகளிலும் கைதிகள் மறுவாழ்வு பெறும் வகையில் மகாத்மா காந்தி கம்யூனிட்டி கல்லூரியை தொடங்கி வைத்தார். மேலும் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 15,000 கைதிகளை நல்ல முறையில் கையாண்டவர். அவர்களது பிரச்னைகளை அவ்வப்போது களைந்தவர் இவர். 

சிறைக்கைதிகள் தண்டனை முடிந்து சிறையில் இருந்து வெளியே போகும்போது அவர்களது மறுவாழ்வுக்காக பல சீர்த்திருத்தங்களை திரிபாதி கொண்டு வந்தார். முன்னாள் டிஜிபி நடராஜ் சிறைத்துறையில் இருந்து மாற்றப்பட்டபோது திரிபாதி சிறைத்துறைக்குப் பணி அமர்த்தப்பட்டார். அப்போது சிறைக்கைதிகள் படிப்பதற்கான உதவிகளையும், கைதிகள் வெளியே வந்து தொழில் செய்து பிழைத்துக் கொள்ளும் வகையில் பல தொழிற்கல்விகளையும் கற்றுக் கொடுக்க பல்வேறு வசதிகளை செய்து கொடுத்தவர்.

திரிபாதியின் சிறந்த பணியை பாராட்டி ‘Innovation in Governance’ என்ற தங்க பதக்கத்தை ஸ்காட்லாண்டு அரசு வழங்கி கவுரவித்தது. அதே போல வாஷிங்டன் அரசும் திரிபாதியின் பணியை பாராட்டி ‘International Community Policing Award என்ற பதக்கத்தை வழங்கியது. தமிழக ஐபிஎஸ் அதிகாரிகளில் இன்டர்நேஷனல் விருது வாங்கிய ஐபிஎஸ் அதிகாரி என்ற பெருமையும் திரிபாதியை மட்டுமே சேரும். 

அதே போல திரிபாதியின் சிறப்பான காவல்பணியை பாராட்டி மத்திய அரசு 2001ம் ஆண்டு மெச்சத்தகுந்த பணிக்கான ஜனாதிபதி பதக்கமும், 2008ம் ஆண்டு பாரதப் பிரதமரின் பதக்கமும், 2002ம் ஆண்டு இந்திய அளவிலா உயர்ந்த பதக்கங்களான டாக்டர் மால்கம் எஸ்.ஆதிசேஷையா போன்ற சிறப்பு பதக்கங்களையும் பெற்றுள்ளார். மேலும் பிரதமரின் பதக்கத்தை பெற்ற முதல் இந்திய ஐபிஎஸ் அதிகாரி என்ற பெருமையும் திரிபாதியையே சாரும்.

2012ம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் திரிபாதி சென்னை மாநகர கமிஷனராக பதவி ஏற்றதும் போலீஸ் நிலையங்களின் நிலைமையை அறிந்து கொள்ள நேரிலேயே செல்வார். அது போன்ற அதிரடி சோதனைக்கு போகும் போது போலீஸ் நிலையத்திற்கு சிறிது தூரம் தள்ளியே தனது காரை நிறுத்தி விட்டு நடந்தே செல்வார். 

இவ்வாறு வடசென்னையிலுள்ள ஒரு போலீஸ் நிலையத்திற்கு சென்ற போது சுமார் அரை மணி நேரம் அந்த போலீஸ் நிலையத்தை நோட்டமிட்டார். அப்போது காவல் நிலைய வாசலில் வெகுநேரமாக ஒருவர் நின்றபடி காத்துக்கிடந்தார். இதனை உணர்ந்து கொண்ட திரிபாதி நேராக ஸ்டேஷனுக்குள் சென்று, ரைட்டரிடம், “இவர் ஏன் இவ்வளவு நேரம் காத்து கிடக்கிறார்” என கேட்க, “இன்ஸ்பெக்டர் இல்லை”என ரைட்டர் கூற, “உங்கள் இன்ஸ்பெக்டரை என்னை வந்து நேரில் சந்திக்க சொல்லுங்கள்” எனத் திரிபாதி கூறியுள்ளார். அதைக்கேட்ட ரைட்டர், “என்னைக் கேள்வி கேட்க நீ யார்?” என வழக்கம் அவரை எகிற, “நான் சிட்டி போலீஸ் கமிஷனர்” என்றதும் ஆடிப்போன அந்த ரைட்டர். அவர் அமர்ந்திருந்த நாற்காலியில் இருந்து எகிறி குதித்து வந்து சல்யூட் அடித்து மன்னிப்பு கேட்டுள்ளார். இம்மாதிரி பல்வேறு நிகழ்வு நடந்ததாக சில காவல் அதிகாரிகள் கூறுகின்றனர். 

சென்னையை கலங்கடித்த தாதா வீரமணியை கமிஷனர் விஜயகுமாரின் சீரிய வழிகாட்டுதலின் பேரில் நடந்த என்கவுன்டர், அதன் பின்னர் 2012ம் ஆண்டு வேளச்சேரியில் வங்கிக் கொள்ளையர்களின் கதையும் என்கவுன்டரில் முடித்தது என திரிபாதியின் துணிச்சலுக்கு சிறந்த உதாரணம். 

திரிபாதிக்கு சிறுவயதில் இருந்தே புகைப்படம் எடுப்பதில் அலாதி ப்ரியம். வீட்டில் நிறைய கேமராக்கள் வைத்துள்ளார். புதிய பாடல்களை விட பழைய பாடல்கள் மற்றும் கர்நாடக இசை கேட்பது அவருக்குப் பிடித்தமான விஷயம். இவரது மனைவி அனுஜா சிறந்த எழுத்தாளர். அவர் நிறைய கதைகள் எழுதியுள்ளார்.

தகவல்கள் : R.சுப்ரமணியன்,செய்தியாளர் - சென்னை