நாங்குநேரி தொகுதியில் தனித்து போட்டியிடுவது குறித்து தீர்மானம் நிறைவேற்றவில்லை என தமிழ்நாடு காங்கிரஸ் விளக்கம் தெரிவித்துள்ளது.
நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி, “தென் தமிழகம் என்பது காங்கிரஸ் கட்சியின் வேர், காங்கிரஸ் கட்சியின் உயிர் நாடி. அதனை மேலும் பலத்தபடுத்தவே இந்த கூட்டம். நாம் 50 ஆண்டுகளாக எதிர்கட்சியாக இருப்பது ஏன் ? கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலியில் பலம் இருந்தும் கூட ஏன் தனித்து நின்று வெற்றி பெற முடியாதா ? கூட்டணி இன்றி வெற்றி பெற முடியாதா ? என்பதற்காக தான் இந்த கூட்டம்” என கேள்வி எழுப்பினார். அத்துடன் இக்கூட்டத்தில் நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில் நாங்குநேரி தொகுதியில் தனித்து போட்டியிடுவது குறித்து தீர்மானம் நிறைவேற்றவில்லை என தமிழ்நாடு காங்கிரஸ் விளக்கம் தெரிவித்துள்ளது. தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், இதுகுறித்து விளக்கம் கேட்டு நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.