புதுக்கோட்டை மாவட்டம் நடுப்பட்டியைச் சேர்ந்த விளிம்புநிலை சமுதாய இளைஞர் ஹரிஹரன் காதல் தொடர்பை முன்னிட்டு சமூக, சாதி அழுத்தங்களால் மரணமடைந்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் குலத்தூர் தாலுகா நடுப்பட்டி பகுதி விளிம்புநிலை சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர் ஹரிஹரன் (20) மரணம் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. காதல் தொடர்பு காரணமாக சமூக மற்றும் சாதிய அழுத்தங்களுக்கு உள்ளாகி, அவர் உயிரிழந்திருக்கிறார் என்ற செய்தி மிகவும் கண்டனத்திற்குரியது எனத் தெரிவித்துள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, சாதி வேறுபாடு என்ற பெயரில் இளைஞர்களின் வாழ்க்கை சீரழிக்கப்படுவது, மனிதநேயத்திற்கும் சமத்துவக் கொள்கைக்கும் எதிரான கொடூரமான செயலாகும். இத்தகைய சம்பவங்கள் நாகரீக காலத்தில் தற்போதும் நடைபெறுவது நம் சமூகத்தின் பின்னடைவை வெளிப்படுத்துகிறது எனவும் தெரிவித்திருக்கிறார்.
முன்னதாக, புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வட்டம் திருமலைராயபுரத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார் மகன் ஹரிஹரன்(20). இவரை, கடந்த 21-ம் தேதியில் இருந்து காணவில்லை என குடும்பத்தினர் தேடி வந்தனர். இது குறித்து வெள்ளனூர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர், திருமலைராயபுரம் பகுதியில் உள்ள கல் குவாரியில் சடலமாக கிடந்தது 23-ம் தேதி தெரியவந்தது. அன்றைய தினமே அவரது உடலைக் கைப்பற்றிய போலீஸார், பிரேத பரிசோதனைக்காக மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், இறந்த ஹரிஹரன், ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், அதற்கு பெண்ணின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், பெண்ணின் குடும்பத்தினரின் தூண்டுதலின் பேரில் ஹரிஹரன் இறந்திருக்கலாம் என்பதால் பெண்ணின் குடும்பத்தினரை வழக்கில் சேர்க்க வேண்டுமென வலியுறுத்தி, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த ஹரிஹரினியின் சடலத்தை வாங்காமல் அவரது குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதனைத் தொடர்ந்து ஹரிஹரன் உயிரிழந்த விவகாரத்தில் வன்கொடுமை தடுப்பு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பெண்ணின் குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மீது புதுக்கோட்டை காவல் துணைக் கண்காணிப்பாளர் பிருந்தா வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார். இதற்கிடையில், இவ்வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரிக்கப்பட வேண்டுமென மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நீலம் பண்பாட்டு அமைப்பினர் மனு அளித்திருக்கின்றனர். இத்தகைய சூழலில் தான், இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில் தெரிவித்துள்ளார்.