விஜய் ANI
தமிழ்நாடு

அன்று அதிமுக.. இன்று தவெக.. திமுகவை நோக்கி ஒரே கேள்வி! யார் அந்த ரத்தீஷ்?

திமுக மீதான குற்றச்சாட்டுகளை அடுக்கி சட்டமன்றத்தில் பேசிய முதலமைச்சர் விஜய், ரத்தீஷ் என்ற நபரின் பெயரைக் குறிப்பிட்டு யார் அவர் என எதிர்க்கட்சிக்கு கேள்வி எழுப்பியிருக்கிறார். உண்மையில் யார் அந்த ரத்தீஷ்?... இந்த தொகுப்பில் பார்க்கலாம்...

ஹாஜிராபானு அ

இன்று சட்டப்பேரவையில் அமலாக்கத் துறை அறிக்கைகளை சுட்டிக்காட்டி பேசிய முதலமைச்சர் விஜய், டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் அடிபட்ட முக்கியப் பெயரைக் குறிப்பிட்டு பேசினார்.

CM Vijay

”கடந்த ஆட்சியில் டாஸ்மாக்கை கைவசம் வைத்திருந்த அமைச்சரோடு சேர்ந்து ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட சிலபேரும் அந்த விஷயத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். சில தனிநபர்களின் பெயர்களும் அமலாக்கத் துறை அறிக்கையில் இடம்பெற்றிருக்கிறது. அதிலும் குறிப்பாக ரத்தீஷ் என்பவர், பல அதிகாரிகளின் பணியிட மாற்றத்தை முடிவு செய்திருக்கிறார். குறிப்பாக, டி.ஆர்.ஓ. அளவிலான அதிகாரிகளின் பணியிட மாற்றத்தையெல்லாம் அவரே முடிவு செய்திருக்கிறார். அவரைப் பற்றி சொல்லும்போது A CENTRAL FIGURE OPERATING AS AN UNAUTHORIZED POWER BROKER என அமலாக்கத் துறை பெருமையாகச் சொல்லியிருக்கிறது. இந்த ரத்தீஷின் உத்தரவின்படிதான் அப்போதைய டாஸ்மாக் நிர்வாக இயக்குநராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி செயல்பட்டார் என அத்துறை சொல்லியிருக்கிறது. யார் இந்த ரத்தீஷ்?... இவர் யாருக்கு நெருக்கமானவர்? நம்முடைய அரசு வந்த பிறகு, ரத்தீஷ் துபாயில் சென்று ஒளிந்துகொண்டார். யாருடைய வழிகாட்டுதலின்பேரில் அவர் இத்தனை வருடமாக இதையெல்லாம் செய்துகொண்டிருந்தார். பதில் சொல்வார்களா?. கடவுளுக்குத்தான் வெளிச்சம்” எனப் பேசியிருந்தார் முதலமைச்சர் விஜய்.

திமுக ஆட்சியின்போது நடந்ததாகக் குற்றம்சாட்டப்படும் டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் அடிபட்ட பெயர்களில் ஒன்றுதான் ரத்தீஷ். டாஸ்மாக் நிர்வாக இயக்குநராக இருந்த விசாகன் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை நடந்தபோது, கிழிந்த நிலையில், கிடைத்த ஆவணங்களில் ரத்தீஷின் பெயர் அடிபட்டது. அதாவது, அந்த ஆவணங்களில் டாஸ்மாக் நிர்வாக இயக்குநர், ரத்தீஷுடன் பேசிய வாட்ஸ்-அப் சாட்கள் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. ரத்தீஷ் தற்போது தலைமறைவாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இவர் திமுக தலைமைக்கு நெருக்கமானவர் என்றும் கூறப்படுகிறது.

அப்போதைய எதிர்க்கட்சியாக இருந்த அதிமுக, டாஸ்மாக்கில் வாங்க வேண்டிய மதுபானங்கள் பட்டியலை அதன் எம்.டி.க்கு அனுப்பும் அளவிற்கு அதிகாரம் படைத்த இந்த ரத்தீஷ்தான் திமுகவின் பவர் சென்டரா என கேள்வி எழுப்பியிருந்தது. முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறையின் விசாரணை வளையம் ரத்தீஷை நெருங்குகிறது எனவும், யார் அந்த சார் எனவும் அன்றைக்கு அதிமுக எழுப்பிய அதே கேள்வியைத்தான் இன்று சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜயும் எழுப்பியிருக்கிறார்.