Dk Shivakumar & Vijay  web
தமிழ்நாடு

காவிரி நதிநீர் விவகாரம்.. கர்நாடகா செல்லும் முதல்வர் விஜய்!

கர்நாடகா - தமிழ்நாடு இரண்டு மாநிலங்களுக்கு இடையே காவிரி நதிநீர்ப் பிரச்னை என்பது பல ஆண்டு காலமாகவே இருந்துவருகிறது.

PT WEB

மேகதாது அணை மற்றும் காவிரி நதி நீர் பிரச்னை குறித்து நேரடிப் பேச்சுவார்த்தை நடத்த ஆகஸ்ட் 3ஆம் தேதி பெங்களூருவுக்கு தமிழக முதலமைச்சர் விஜய் செல்லவுள்ளதாக வேளாண் துறை அமைச்சர் ஆர்.வினோத் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்; M. மீரா

கர்நாடகா - தமிழ்நாடு இரண்டு மாநிலங்களுக்கு இடையே காவிரி நதிநீர்ப் பிரச்னை என்பது பல ஆண்டு காலமாகவே இருந்துவருகிறது. தமிழ்நாட்டிற்கு 177.25 டிஎம்சி தண்ணீரை கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. கடந்த சில ஆண்டுகளாக தென்மேற்குஒ பருவமழை நன்றாக பெய்த காரணத்தால் உச்ச நீதிமன்றம் தெரிவித்த 177.25 டிஎம்சி தண்ணீரைவிட காவிரியில் இருந்து கூடுதலாகவே கர்நாடக அரசு திறந்துவிட்டது. ஆனால் இந்த ஆண்டு போதியமழை இல்லாததால் தண்ணீர் திறந்துவிடப்படவில்லை.

Cauvery water

இந்தச் சூழலில் அண்மையில் நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டங்களில் தமிழகத்திற்கு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் கிடைக்க வேண்டிய நீரை கர்நாடகா உடனடியாக திறந்துவிட வேண்டும் எனத் தமிழ்நாடு அரசுத் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால், குடிநீர் தேவைக்கு மட்டுமே நீர் இருப்பதாகவும், மழைப் பொழிவு குறைவாக இருப்பதால் தமிழகத்திற்குத் தண்ணீர் திறக்க இயலாது என்றும் கர்நாடகா தொடர்ந்து மறுத்து வருகிறது. மற்றொருபுறம், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்டும் திட்டத்தில் கர்நாடக அரசு தீவிர ஆர்வம் காட்டி வருகிறது. இதற்குத் தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இத்திட்டத்தைத் தடுத்து நிறுத்தவும், காவிரி விவகாரத்தில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் சட்டமன்றத்தில் முதல்வர் கொண்டுவந்த தீர்மானம் அண்மையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், மேகதாது அணை மற்றும் காவிரி நதி நீர்ப் பிரச்னை குறித்து நேரடிப் பேச்சுவார்த்தை நடத்த ஆகஸ்ட் 3-ஆம் தேதி பெங்களூருவுக்கு தமிழக முதலமைச்சர் விஜய் செல்லவுள்ளதாக வேளாண் துறை அமைச்சர் ஆர்.வினோத் தெரிவித்துள்ளார்.

CM Vijay

கர்நாடக அரசுடனான இந்தச் சந்திப்பில், தமிழகத்திற்குச் சேர வேண்டிய காவிரி நீரை உடனடியாகத் திறக்க வலியுறுத்தப்படும் என்றும், தமிழகத்தின் விவசாய உரிமைகளைப் பாதிக்கும் மேகதாது அணை திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.