ஜல்லிக்கட்டு தொடர்பாக மாணவர்கள் மேற்கொள்ளும் போராட்டத்தை கைவிட வேண்டும் என முதலமைச்சர் பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வலியுறுத்தியும், பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் எனவும் தமிழகத்தில் வரலாறு காணாத அளவில் போராட்டம் நடைபெற்று வருகிறது. சமூக வலைதளங்கள் மூலம் ஒன்றிணைந்த லட்சக்கணக்கான இளைஞர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் மேற்கொள்ளும் இந்த தொடர் போராட்டத்தை கைவிட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். ஜல்லிக்கட்டு தொடர்பாக பிரதமரை சந்திக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மாணவர்கள், இளைஞர்கள் மேற்கொள்ளும் போராட்டம் நமது உணர்வுகளை வெளிபடுத்துகிறது என்று குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், போராடும் இளைஞர்கள் தங்களது போராட்டத்தைக் கைவிடுமாறு அன்போடு கேட்டுக் கொள்வதாகக் கூறியுள்ளார்.