தமிழ்நாடு

இன்று குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

jagadeesh

டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சந்திக்க உள்ளார். அப்போது தமிழக நலன் சார்ந்த திட்டங்கள் குறித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் இரண்டாவது முறையாக டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, தமிழ்நாடு அரசுக்கான டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன் மற்றும் திமுக எம்.பி.க்கள் வரவேற்றனர். தமிழ்நாடு இல்லத்தில் மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங்களவை எம்.பியுமான வைகோ, பொன்னாடை போர்த்தி வரவேற்றார். இன்று நண்பகலில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை முதலமைச்சர் ஸ்டாலின் சந்திக்க உள்ளார்.

தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக குடியரசுத் தலைவரை சந்திக்கவிருக்கும் மு.க.ஸ்டாலின், மேகதாது அணை விவகாரம், நீட் தேர்வு விலக்கு ஆகியவை குறித்து மத்திய அரசுக்கு உத்தரவிட வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவு நாளையொட்டி வரும் 7-ஆம் தேதி சட்டப்பேரவையில் அவரது உருவப்படம் திறக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் நேரில் சந்தித்து முதலமைச்சர் அழைப்பு விடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மாதம் 17-ஆம் தேதி முதன்முறையாக டெல்லி சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியை சந்தித்து தமிழ்நாடு தொடர்பான கோரிக்கைகளை மனுவாக அளித்திருந்தார்.