காவிரி நீர் பங்கீடு தொடர்பான கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சமீபத்தில் டெல்லி சென்றிருந்த கர்நாடக முதல்வர் குமாரசாமி, அங்கு பிரதமர் மோடி, நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்காரி ஆகியோரை சந்தித்தார். இந்தச் சந்திப்புகளுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குமாரசாமி, “காவிரி மேலாண்மை ஆணையத்தில் சில அம்சங்கள் கர்நாடகாவுக்கு எதிராக உள்ளன. நாடாளுமன்ற இரு அவைகளிலும் அதுபற்றி விவாதித்துதான் முடிவெடுத்திருக்க வேண்டும்” என்று கூறினார். அவரது கருத்துக்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று கடிதம் எழுதியுள்ளார். காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும் என முதல்வர் அந்தக் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், “கூட்டத்தை மத்திய நீர்வள ஆணையத்திற்கு பிரதமர் உத்தரவிட வேண்டும். ஆணையத்துக்கான உறுப்பினர்களை பரிந்துரைக்க கர்நாடகாவுக்கு வலியுறுத்த வேண்டும். குழுவை முறையாக அமைத்து செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்” என்றும் கடிதத்தில் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.