தமிழ்நாடு

புதுக்கோட்டைச் சிறுமி குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் - முதல்வர் அறிவிப்பு

புதுக்கோட்டைச் சிறுமி குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் - முதல்வர் அறிவிப்பு

jagadeesh

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரண நிதியாக வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த சிறுமி திடீரென மாயமானார். பின்னர் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, மோப்ப நாயின் உதவியுடன் சிறுமி தேடப்பட்டார். அப்போது அப்பகுதியிலிருந்த கருவேலமரங்கள் நிறைந்த கம்மாய் கரையில் சிறுமியின் சடலம் மீட்கப்பட்டது. இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட பிரதேப் பரிசோதனையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இந்தச் சம்பவத்தில் ராஜேஷ் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக மேலும் இருவரைக் கைது செய்ய வேண்டும் எனச் சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இது குறித்து இரங்கல் தெரிவித்து முதல்வர் விடுத்துள்ள அறிக்கையில் " புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் வட்டம், ஏம்பல் கிராமத்திலிருந்து ஜூன் 30 ஆம் தேதி முதல் காணாமல் போன சிறுமி, காவல் துறையினரால் தேடப்பட்டு வந்த நிலையில் ஜூலை 1 ஆம் தேதி அன்று மாலை வண்ணாங்குளம் என்ற ஊரணியில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். அச்சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்" எனக் கூறியுள்ளார்.

மேலும் "இந்தக் கொடூரச் செயலுக்குக் காரணமான குற்றவாளி கைது செய்து செய்யப்பட்டுள்ளார். குற்றவாளியைச் சட்டத்தின் முன் நிறுத்தி, உரியத்
தண்டனையைப் பெற்றுத் தரத் துரித நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறை அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவருடைய குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஐந்து லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்" எனத் தெரிவித்துள்ளார்.