தவெக கரூர் பரப்புரை எக்ஸ்
தமிழ்நாடு

கரூர் சம்பவம் | எடப்பாடி பழனிசாமி கருத்துக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பதிலடி!

நீதியரசர் அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை கிடைத்தவுடன், அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகளுக்கான கடுமையான நெறிமுறைகள் வகுக்கப்படும் என்றும் முதல்வர் உறுதியளித்தார்.

Prakash J

நீதியரசர் அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை கிடைத்தவுடன், அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகளுக்கான கடுமையான நெறிமுறைகள் வகுக்கப்படும் என்றும் முதல்வர் உறுதியளித்தார்.

கரூரில் கடந்த 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பரப்புரையின் போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சோக சம்பவம் பலரின் மனதை உலுக்கிய நிலையில், கூட்டநெரிசல் ஏற்பட என்ன காரணம் என்பது குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது. அவர் சம்பவம் நடந்த வேலுசாமிபுரத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகிறார். அதேபோல், கரூர் சம்பவம் தொடர்பாக விசாரிக்க ஏ.டி.எஸ்.பி. பிரேமானந்தன் நியமிக்கப்பட்டுள்ளார். அவரும் விசாரணை நடத்தி வருகிறார்.

விஜய் - முதல்வர் ஸ்டாலின்

மறுபுறம், கரூர் தவெக கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம் குறித்து ஆழ்ந்த வேதனை தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நீதியரசர் அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை கிடைத்தவுடன், அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகளுக்கான கடுமையான நெறிமுறைகள் வகுக்கப்படும் என்றும் முதல்வர் உறுதியளித்தார். மேலும் வதந்திகளைப் பரப்புவதைத் தவிர்த்து, மக்களின் நலனுக்காக அனைவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டுமெனவும் முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்

அதேநேரத்தில், கரூர் விவகாரம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் போட்டோஷூட் வீடியோ வெளியிட்டுள்ளதாக அதிமுக பொதுச் செயலர் பழனிசாமி விமர்சித்துள்ளார். மக்களின் உணர்வாக அவர்களது சந்தேகங்களை, தான் பதிவு செய்ததாகவும், அதற்குப் பதில் அளிக்க முடியாமல் சமூக வலைதளங்களில் அவதூறு பரவுகிறது என முதல்வர் ஸ்டாலின் கூறுவதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். என்ன அவதூறு பரவியது எனக் கூறி, பல்வேறு வினாக்களையும் எழுப்பியுள்ளார். எதிர்க்கட்சிகள் யாரும் இதுவரை எந்த அரசியலும் செய்யவில்லை என்றும், முதல்வரின் வீடியோதான் பல அரசியல் சந்தேகங்களை ஏற்படுத்துவதாகவும் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். ஒருநபர் விசாரணை ஆணையம் கண்துடைப்பு என்றும், உரிய நீதி கிடைக்க சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

அன்பில் மகேஸ், இபிஎஸ்

ஆனால் அவரது விமர்சனத்திற்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பதிலடி கொடுத்துள்ளார். கரூர் சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்டிருக்கும் நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்தைதான், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நடந்தபோது அமைத்தவர் அன்றைய முதல்வர் பழனிசாமி என்றும், அப்போது பழனிசாமியின் கண் மூடியிருந்ததா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். ஜெயலலிதாவின் மரணத்தை ஆறுமுகசாமி ஆணையம் விசாரித்ததுகூட கண்துடைப்புதானா என்றும வினவியுள்ளார். இன்னொரு புறம், கரூர் பெருந்துயரத்தின்போது அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி அழுது நடித்ததாகவும், அவருக்கு ஆஸ்கர் விருது கொடுக்கலாம் என்றும் பாமக தலைவர் அன்புமணி விமர்சித்துள்ளார்.

அதுதொடர்பாக கருத்து தெரிவித்த அவர், பாமக தலைவர் அன்புமணி நாகரீகமற்ற முறையில் கொச்சைப்படுத்தியிருப்பதா தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், உயிரிழந்தவர்களில் 9 பேர் பள்ளிக்கு செல்லும் வயதிலும், எதிர்காலத்தில் பள்ளிக்கு செல்லக் கூடிய வயதிலும் இருந்த பிஞ்சு குழந்தைகளாவர் என கூறியுள்ளார். அவர்களை தம்முள் ஒருவராக தாம் கருதுவதாகவும், தந்தையை கூட கொச்சைப்படுத்தும் அன்புமணியின் கருத்தைப் பொருட்படுத்தப்போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே, கரூரில் விஜய் பரப்புரைக் கூட்டத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், எல்.முருகன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். அப்போது தங்களது ஆதங்களையும், கேள்விகளையும் பாதிக்கப்பட்டவர்கள் முன்வைத்தனர். மேலும், காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரையும் சந்தித்து, அவர்கள் ஆறுதல் கூறினர். பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பிரதமர் வர இயலாததால், அவரின் அறிவுறுத்தலின்படி வந்ததாக தெரிவித்தார். இனிவருங்காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காதவாறு, அரசியல் கட்சிகளுக்கான நெறிமுறைகள் தொடர்பாக பிரதமரிடம் அறிக்கை சமர்பிக்கப்படும் என அவர் உறுதியளித்தார்.

நிர்மலா சீதாராமன்

கரூரில் சம்பவம் தொடர்பாக விசாரிக்க, ஹேம மாலினி எம்.பி. தலைமையில் 8 பேர் கொண்ட குழுவை பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா அமைத்துள்ளார். முன்னாள் மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், தேஜஸ்வி சூர்யா உள்ளிட்ட 8 பேர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர். இதற்கான அறிவிப்பை பாஜக தேசிய பொதுச்செயலர் அருண் சிங் வெளியிட்டுள்ளார். பாஜக விசாரணை குழு விரைவில் கரூர் சென்று விசாரணையை மேற்கொள்ள உள்ளது.