இன்று மாலை தேர்தல் தேதி அறிவிக்கப்படவுள்ள நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளார்களை சந்தித்த முதல்வர் பழனிசாமி, அரசு அறிவிக்க உள்ளவற்றை ஸ்டாலின் முன்கூட்டியே தெரிந்துகொள்கிறார் என்று கூறினார்.
ஆனால் இவை அனைத்தையும் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் சொல்லித்தான் நான் ரத்துசெய்ததாக அவர் உண்மைக்கு புறம்பாக பேசிவருகிறார். அரசு அறிவிக்க உள்ளவற்றை முன்கூட்டியே தெரிந்துகொண்டு மு.க. ஸ்டாலின் அவற்றை அறிவித்துவிடுகிறார். மக்களுக்கு எந்த காலகட்டத்தில் உதவிசெய்ய வேண்டுமோ அதை அந்தந்த காலத்தில் செய்கிறோம். இந்தியா முழுவதும் எல்லா மாநிலங்களும் கடன் வாங்கித்தான் மக்களுக்கு உதவி செய்கின்றன. எந்த மாநிலமும் கையில் பணத்தை வைத்துக்கொண்டு திட்டங்களை அறிவிப்பதில்லை. வளர்ச்சித் திட்டங்களுக்கு கடன் வாங்கவேண்டிய அவசியம் இருப்பதால் வாங்கப்படுகிறது.
2011இல் ஒரு லட்சம் கோடி ரூபாய் கடன் இருந்ததாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலினே தெரிவித்துள்ளார். 10 ஆண்டுகளில் ஏறிய விலைவாசிக்கு ஏற்ப இப்போது ரூ.5.7 லட்சம் கோடி கடன் இருக்கிறது. நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் திமுக குரல் கொடுக்கவில்லை, தேர்தல்வந்தால் குரல் கொடுப்பார்கள் என்றார்.