தமிழ்நாடு

சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்கு 92% மக்கள் நிலம் கொடுத்துள்ளனர்-முதல்வர் பழனிசாமி

Sinekadhara

’’ சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்கு, 92% மக்கள் தங்கள் நிலத்தைக் கொடுத்து இருக்கின்றனர்’’ என்று அரசு விழாவில் பேசிய முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

அரியலூரில் நடைபெற்ற அரசுவிழாவில் கலந்துகொண்ட முதல்வர், பல்வேறு அரசுத் துறைகள் சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் அரசு சார்பில் முடிக்கப்பட்ட பல்வேறு திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார்.

பின்னர் உரையாற்றிய முதல்வர், ’’கேரளா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. ஆனால் தமிழகத்தில் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு சிறப்பாக செயல்படுவதால்தான் எதிர்க்கட்சிகளால் அதுபற்றி பேச முடியவில்லை’’ என்றார்.

மேலும், 8 வழிச்சாலை திட்டம் குறித்து பேசிய அவர், ‘’கிட்டத்தட்ட 92% மக்கள் சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்கு தங்கள் நிலத்தைக் கொடுத்து இருக்கின்றனர். வெறும் 8% பேர் மட்டுமே வேண்டுமென்றே நிலத்தைத் தராமல் இருக்கின்றனர்.

மத்திய அரசின் இந்த திட்டத்தால் எரிபொருள் மிச்சமாகிறது, விபத்து, சுற்றுச்சூழல் பாதிப்பு குறைகிறது மற்றும் 50 கி.மீ தூரம் குறைக்கப்படுகிறது. இதைக் கருத்தில்கொண்டுதான் தமிழக அரசு நிலம் ஒதுக்கிக் கொடுக்க முன்வந்தது. மக்கள் நிலம்கொடுக்க முன்வந்தால் அரசு சாலையமைக்க தயாராக இருக்கிறது’’ என்று பேசினார்.