தமிழ்நாடு

“என் மீது வைத்த நம்பிக்கையை காப்பாற்றுவேன்” - தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்

“என் மீது வைத்த நம்பிக்கையை காப்பாற்றுவேன்” - தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்

webteam

தன் மீது பாஜக தலைமை வைத்த நம்பிக்கையை காப்பாற்றுவேன் என தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ள எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் பதவி காலியாக இருந்த நிலையில், அதன் தலைவராக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவராக உள்ள எல்.முருகனை பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தேர்வு நியமித்துள்ளார். இந்நிலையில், புதிய தலைமுறைக்கு தொலைபேசி வாயிலாக பிரத்யேக பேட்டியளித்த எல்.முருகன், “பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு முதலில் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.

என் மீது நம்பிக்கை வைத்து பாஜகவின் மாநிலத் தலைவராக அறிவித்துள்ளனர். அவர்களது நம்பிக்கைக்கு ஏற்ப தமிழ்நாட்டில் என்னுடைய பணியை சிறப்பாக செய்வேன் என தெரிவித்துக்கொள்கிறேன். ஏற்கனவே தாழ்த்தப்பட்டோர் தேசிய ஆணையத்தின் துணைத்தலைவராக பல பணிகளை செய்து மக்களை சந்தித்து இருக்கிறேன்” என தெரிவித்தார்.

எல்.முருகன் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவராக உள்ளார். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றிவர். சட்டப்படிப்பில் பிஹெச்டி முடித்தவர். சென்னை உயர்நீதிமன்றத்தின் நிலைக்குழு உறுப்பினராக பதவி வகித்தவர்.