தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 28 ம் தேதி தொடங்கும் என்று பேரவை செயலாளர் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் உடனடியாக சட்டப்பேரவையை கூட்ட வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தன. இந்நிலையில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 28 ம் தேதி தொடங்கும் என்று பேரவை செயலாளர் அறிவித்துள்ளார். கூட்டத்தின் முதல் நாளில், மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு ஒத்திவைக்கப்படும் எனத் தெரிகிறது.
சுமார் ஒருமாத காலம் இந்தக் கூட்டத்தொடர் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டத்தொடரில் மானியக் கோரிக்கைகள் குறித்த விவாதம் நடைபெற உள்ளது. மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்குப் பிறகு நடைபெறும் கூட்டத்தொடர் என்பதால், இந்தத் தொடர் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குடிநீர் பிரச்னை, உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாதது போன்ற விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன என்று கூறப்படுகிறது.