பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்டப்பேரவை இன்று ஆளுநர் உடையுடன் தொடங்கவுள்ளது.
2019ஆம் ஆண்டின் முதல் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று கூடுகிறது. முதல் கூட்டத்தொடர் என்பதால் காலை 10 மணிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் கூட்டம் தொடங்குகிறது. ஆளுநரின் உரையில் அரசின் திட்டங்கள் குறித்த அம்சங்கள் இடம்பெறும் என தெரிகிறது. ஆளுநர் உரைக்குப் பின் கூட்டத்தொடரை எத்தனை நாட்களுக்கு நடத்துவது என்பது பற்றி சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவு செய்யும்.
அப்போது ஆளுநரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு எவ்வளவு நேரம் ஒதுக்கவேண்டும் என்பது உள்ளிட்டவை குறித்து முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கூட்டத்தொடரில் கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரம், குட்கா விவகாரம், கஜா பாதிப்புக்கு மத்திய அரசிடம் இருந்து நிதி பெறுவது, மேகதாது அணை விவகாரம், அமைச்சர்கள் மீதான ஊழல் புகார் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து கேள்வி எழுப்ப திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.