தமிழ்நாடு

11 எம்எல்ஏக்கள் விவகாரம்: சபாநாயகர் நாளை முதல் விசாரணை?

11 எம்எல்ஏக்கள் விவகாரம்: சபாநாயகர் நாளை முதல் விசாரணை?

jagadeesh

11 எம்எல்ஏக்கள் விவகாரம் தொடர்பாக சபாநாயகர் தனபால் நாளை முதல் காணொலி மூலம் விசாரணை மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2017-ஆம் ஆண்டு பதவி ஏற்றதும் பிப்ரவரி மாதம் 18-ஆம் தேதி நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கொண்டு வந்தார். அப்போது அதிருப்தியில் இருந்த தற்போதைய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். ஆனாலும் எடப்பாடி பழனிசாமி 122 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருந்ததால் பெரும்பான்மையை பெற்றார். நம்பிக்கை கோரும் தீர்மானம் வெற்றி பெற்றது.

இதனிடையே கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டுடன் ஆட்சிக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய உத்தரவிடக்கோரி திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து திமுக தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி பாப்டே அமர்வில் விசாரணைக்கு வந்தது.

விசாரணை முடிவுற்ற நிலையில், தமிழக சபாநாயகர் விரைவில் உரிய நல்ல முடிவை எடுப்பார் என நம்புவதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்திருந்தனர். மேலும், நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு எந்த காலக்கெடுவும் விதிக்க முடியாது எனக்கூறி வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம்.

இதனையடுத்து ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பினார். அதில், ஏன் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்தீர்கள் என விளக்கம் கேட்கப்பட்டது. இந்நிலையில் 11 எம்எல்ஏக்கள் விவகாரத்தில் சபாநாயகர் தனபால் நாளை முதல் காணொலி மூலம் விசாரணை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.