விஜய் Pti
தமிழ்நாடு

அமைச்சரவைக் கூட்டம் நிறைவு.. ஜூன் 18-ல் சட்டமன்ற கூட்டத் தொடர்!

ஜூன் 18ஆம் தேதி ஆளுநர் உரையுடன் சட்டமன்றக் கூட்டத் தொடர் தொடங்கும் என சபாநாயகர் ஜே.டி.சி. பிரபாகர் தெரிவித்துள்ளார்.

Premkumar S

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று தவெக ஆட்சியமைத்திருக்கும் நிலையில், காங்கிரஸ், விசிக மற்றும் ஐயூஎம்எல் கட்சிகள் அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கின்றன. இந்தசூழலில் தான், தவெக தலைமையிலான தமிழக அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. தொடர்ந்து, இந்தக் கூட்டம் நிறைவு பெற்ற நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் நிர்மல்குமார்,  436 திட்டங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

சி.டி.ஆர். நிர்மல்குமார்

தொடர்ந்து, இந்தக் கூட்டத்தில் லஞ்சம் இல்லாத ஆட்சி மற்றும் போதையில்லா தமிழகம் உருவாக்க நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு முதலமைச்சர் அமைச்சர்களுக்கு அறிவுறுத்தியதாக தெரிகிறது. மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு நிலை, நிதி நிலைமை மற்றும் மக்கள் நலத் திட்டங்கள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என தகவல் வெளியாகியிருக்கிறது.

இதைத் தொடர்ந்து, இன்று செய்தியாளர்களைச் சந்தித்திருக்கும் சட்டப்பேரவை சபாநாயகர் ஜேடிசி பிரபாகர், ஜூன் 18ஆம் தேதி ஆளுநர் உரையுடன் சட்டமன்றக் கூட்டத் தொடர் தொடங்கும் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து சபாநாயகர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் கூட்டம் 2026-ஆம் ஆண்டு, ஜூன் திங்கள் 18-ஆம் நாள் வியாழக்கிழமை அன்று காலை 10 மணிக்கு. சென்னை-600 009, தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் கூடும். அச்சமயம் தமிழ்நாடு ஆளுநர் உரை நிகழ்த்த உள்ளார்கள்" என்று கூறப்பட்டுள்ளது.