சட்டமன்றத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் PT Web
தமிழ்நாடு

🔴LIVE: 2025-ன் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் முதல் நாள் அமர்வு - முழு விவரம்!

நடப்பாண்டில் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர், ஆளுநர் உரையுடன் இன்று நடக்கிறது. அதன் விவரத்தை, இங்கே காணலாம்...

ஜெ.நிவேதா

பேரவைக்கு வந்தார் ஆளுநர்...

நடப்பாண்டில் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர், ஆளுநர் உரையுடன் இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது. இதில் பங்கேற்க பேரவைக்கு வந்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி. அவரை சபாநாயகர் அப்பாவு வரவேற்றார். ஆளுநருக்கு காவல்துறை சார்பில் அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.

வந்த சில நிமிடங்களில் புறப்பட்டார் ஆளுநர்!

2025-ன் முதல் சட்டமன்ற கூட்டத்தொடரில் உரையாற்றாமல் புறப்பட்டுச் சென்றார் ஆளுநர் ஆர்.என்.ரவி... வந்த சில நிமிடங்களிலேயே புறப்பட்டுச் சென்றார் ஆளுநர்.

தேசிய கீதத்தை முதலில் பாட வேண்டும் என்றும், பின்னரே தமிழ்த்தாய் வாழ்த்தை பாட வேண்டும் என்றும் ஆளுநர் வலியுறுத்தியதாகவும், அதற்கு பேரவை ஒப்புக்கொள்ளவில்லை என்றும் சொல்லப்படுகிறது. முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்ட உடன் ஆளுநர் வெளியேறியதாக சொல்லப்படுகிறது.

அதிமுக-வினர் பேரவையில் இருந்து வெளியேற்றம்!

யார் அந்த சார்? என்ற பதாகைகளை ஏந்தி சட்டப்பேரவையில் முழக்கமிட்ட அதிமுகவினர் வெளியேற்றப்பட்டுள்ளனர். முன்னதாக அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் யார் அந்த சார் என்று வாசகம் அடங்கிய ஸ்டிக்கரை ஒட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.

“தேசிய கீதம் அவமதிக்கப்பட்டது” - ஆளுநர் மாளிகை

சட்டப்பேரவைக்கு வந்த சில நிமிடங்களிலேயே வெளியேறி உள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி.

இதுபற்றி ஆளுநர் மாளிகை தங்கள் எக்ஸ் தளத்தில், “தமிழக சட்டசபையில் இன்று மீண்டும் அரசியலமைப்பு மற்றும் தேசிய கீதம் அவமதிக்கப்பட்டது. தேசிய கீதத்தை மதித்தல் என்பது நமது அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள முதல் அடிப்படைக் கடமையாகும். மாண்புமிகு ஜனாதிபதியின் உரையின் தொடக்கத்திலும் முடிவிலும் நாடாளுமன்றத்தில் தேசிய கீதமானது பாடப்படுகிறது அல்லது இசைக்கப்படுகிறது. இதேபோல் அனைத்து மாநில சட்டமன்றங்களிலும் ஆளுநர் உரையின் தொடக்கத்திலும் முடிவிலும் பாடப்படுகிறது.

இன்று ஆளுநர் மாளிகைக்கு வரும்போது தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும் பாடப்பட்டது. ஆளுநர் மாளிகையின் அரசியலமைப்பு கடமையை மரியாதையுடன் நினைவூட்டியதுடன், தேசிய கீதத்தைப் பாடுவதற்காக அவைத் தலைவர் மற்றும் மாண்புமிகு சபாநாயகர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார் ஆளுநர். ஆனால், அவர்கள் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர். இது மிகவும் கவலைக்குரிய விஷயமாகும். அரசியல் சாசனம் மற்றும் தேசிய கீதத்துக்கு இவ்வளவு அவமரியாதை செய்ததில் ஒரு தரப்பினராக இருக்கக் கூடாது என்று கடும் வேதனையுடன் அவையில் இருந்து வெளியேறினார் ஆளுநர்” என்று கூறியுள்ளது.

ஆளுநர் மாளிகையின் விளக்கம் டெலிட்டானது!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தேசிய கீதம் அவமதிக்கப்பட்டதாக ஆளுநர் மாளிகை போட்ட பதிவு, ஒருசில நிமிடங்களில் டெலிட் செய்யப்பட்டது.

ஆளுநர் உரை வாசிக்கிறார் அப்பாவு

ஆளுநர் உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்து வருகிறார்

ஆளுநர் மாளிகையின் புதிய பதிவு

தன் புதிய பதிவில், ஆளுநர் மாளிகை பழைய பதிவின் ஒரு வரியை மட்டும் நீக்கியுள்ளது. அந்த வரி, “மாண்புமிகு ஜனாதிபதியின் உரையின் தொடக்கத்திலும் முடிவிலும் நாடாளுமன்றத்தில் தேசிய கீதமானது பாடப்படுகிறது அல்லது இசைக்கப்படுகிறது” என்பதாகும்.

தீர்மானம் நிறைவேற்றம்

அச்சிடப்பட்டுள்ள ஆளுநர் உரையில் இடம்பெற்றுள்ளதை மட்டுமே அவை குறிப்பில் ஏற்ற சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்.

அவை முன்னவர் துரைமுருகன் பேசுகையில், “தேசிய கீதம் பாடப்படவில்லை என்ற கருத்தை ஆளுநர் கூறியுள்ளார்; தேசிய கீதம் குறித்து கடந்த முறையே ஆளுநருக்கு விளக்கம் அளித்துள்ளார் சபாநாயகர். இப்போது மீண்டும் அதையே செய்கிறார். ஆளுநரின் நோக்கம்தான் என்ன? தேசிய கீதம் மற்றும் அரசமைப்பு மீது தமிழக அரசு மிகுந்த மரியாதை கொண்டுள்ளது” என்றார்.

“ஆளுநர் உரையில் ஒன்றுமே இல்லை” - இபிஎஸ்

“அரசு தயாரித்த ஆளுநர் உரை காற்றடித்த பலூன்போல் உள்ளது; உள்ளே ஒன்றுமில்லை" என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

“ஆளுநர் ரவி மன்னிப்பு கேட்க வேண்டும்”

“அதிமுக ஆட்சியிலும் பேரவையின் இறுதியில்தான் தேசிய கீதம் பாடப்பட்டது. பேரவையை அவமதித்த ஆளுநர் ரவி மன்னிப்புக் கேட்க வேண்டும். தேசிய கீதத்தை அவமதித்ததே ஆளுநர்தான்; தேசிய கீதம் பாடப்படும் வரை காத்திருக்காமல் புறப்பட்டார்” அமைச்சர் சிவசங்கர்

“வேண்டுமென்றே தேசிய கீதத்தை புறக்கணித்துவிட்டனர்”

"சட்டப் பேரவை மரபில் தேசிய கீதத்திற்கு இடமில்லையா? வேண்டுமென்றே தேசிய கீதத்தை புறக்கணித்துவிட்டனர்” என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறி உள்ளார்.

தேசிய கீதத்துடன் பேரவை முதல்நாள் அமர்வு நிறைவு!

தமிழக சட்டப்பேரவையின் முதல்நாள் அமர்வு தேசிய கீதம் இசைக்கப்பட்டு நிறைவடைந்தது