கேரளாவில் வெள்ளத்தால் ஏற்பட்ட சேதத்துக்கு தமிழகமும் ஒரு காரணம் என உச்சநீதிமன்றத்தில் கேரளா குற்றஞ்சாட்டியுள்ளது.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை குறைக்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில், கனமழை காரணமாக அணையில் தற்போது 142 அடி நீர் உள்ளதாகவும் அணை பாதுகாப்பை கருதி நீர்மட்டத்தை குறைக்க வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது.
இந்நிலையில் இவ்வழக்கில் கேரள அரசு சார்பில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை குறைக்க தமிழக அரசு ஒத்துழைக்கவில்லை என புகார் கூறப்பட்டுள்ளது. முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தமிழக அரசு திடீரென திறந்துவிட்ட தண்ணீரே, இடுக்கி மாவட்டத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளத்துக்கு காரணம் என்றும் கேரள அரசு குற்றஞ்சாட்டியுள்ளது.