பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்த தர்மபுரி மாணவியின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற சென்ற மாணவ ஆர்வலர் வளர்மதி, மற்றும் திருநங்கை கிரேஸ் பானு உள்ளிட்ட 17 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தருமபுரி பாப்பிரெட்டிபட்டியில் 12 ஆம் வகுப்பு வந்த மாணவி தீபாவளிக்காக தனது ஊருக்கு வந்துள்ளார். அப்போது, அதே ஊரை சேர்ந்த சதீஸ், ரமேஷ் என்ற இளைஞர்கள் கொடூரமான முறையில் அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இதையடுத்து அப்பெண் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி 5 நாட்களுக்கு பிறகு அப்பெண் உயிரிழந்தார். இதையடுத்து அந்த ஊர் மக்கள் போராட்டம் நடத்தவே இந்தப் பாலியல் வன்கொடுமையில் சம்பந்தபட்ட சதீஸ் என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் ரமேஷ் என்பவர் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
இந்நிலையில், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட மாணவியின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற மாணவர் ஆர்வலர் வளர்மதி, மற்றும் திருநங்கை கிரேஸ்பானு உள்ளிட்ட 17 பேர் சென்றுள்ளனர்.
அப்போது, மாணவிக்கு சரியாக சிகிச்சை வழங்காததே அவரின் உயிரிழப்புக்கு காரணம் என அப்பெண்கள் விவாதித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்கு வந்த போலீசார் அவர்கள் அனைவரையும் கைது செய்தனர்.
இதைத்தொடர்ந்து சிலமணிநேரங்களில் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் உயிரிழந்த மாணவி குடும்பத்தாரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தருமபுரியில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமையில் குற்றவாளிகளுக்கு அரசு உரிய தண்டனை பெற்றுத்தரும் எனவும் பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்துக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இதுகுறித்து வளர்மதி கூறுகையில், ஆறுதல் கூறிவிட்டு கிளம்பும் நேரத்தில் அங்கு லத்தியுடன் வந்த 50 போலீசார் தங்களை கைது செய்ததாகவும் அதற்கான காரணத்தைகூட தெரிவிக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
நாங்கள் உண்மையை வெளிக்கொண்டு வந்து விடுவோம் என போலீசார் பயப்படுவதாகவும் முறையான சிகிச்சை அளித்திருந்தால் அந்தப் பெண்ணை காப்பாற்றியிருக்கலாம் எனவும் குறிப்பிட்டார்.
போலீசார் எங்களிடம் மிகவும் மோசமாக நடந்து கொண்டதாகவும் கைது செய்யப்பட்டதிலிருந்து இதுவரை எங்களை தண்ணீர் கூட குடிக்க அனுமதிக்கவில்லை எனவும் தெரிவித்தார். மேலும் கழிவறைக்கு செல்ல கூட போலீசார் அனுமதிக்கவில்லை எனவும் தெரிவித்தார்.