மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை இல்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது. அங்கு அணைக் கட்டினால் தமிழகத்திற்கு வரும் தண்ணீரின் அளவு குறையும் என்பதால் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இதனிடையே உச்சநீதிமன்ற தீர்ப்பையும் மீறி மேகதாதுவில் அணைக் கட்ட சாத்தியக்கூறு உள்ளிட்ட பல தகவல்களுடன் கூடிய வரைவு அறிக்கையை மத்திய நீர்வள ஆணையத்திற்கு கர்நாடக அரசு அனுப்பியது. இந்த அறிக்கைக்கு மத்திய நீர்வள ஆணையம் அனுமதி அளித்து ள்ளது. இதனால் தமிழக விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். மேகதாது அணைக் கட்ட கர்நாடக மாநிலத்திற்கு அனுமதி தரக்கூடாது எனவும் திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடகத்துக்கு அளித்த அனுமதியை திரும்பப்பெற வேண்டும் எனவும் பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதினார்.
(சிவகுமார்)
இந்நிலையில் சமீபத்தில் சென்னை வந்த கர்நாடக மாநில நீர்வளத் துறை அமைச்சர் சிவகுமார், இரு மாநிலங்களும் பயன்படுத்த முடியாமல் வீணாகக் கடலில் நீர் கலப்பதைத் தடுக்கவே புதிய அணை கட்டப்படுவதாகவும் தமிழக மக்கள் எங்கள் சகோதரர்கள், நண்பர்கள், அவர்களுடன் காவிரி நீரை பகிர்ந்து கொள்ளும் நிலையில் சண்டையிட விரும்பவில்லை என்றும் இந்த விவகாரம் தொடர்பாக தமிழக முதலமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்த நேரம் கேட்கப்பட்டதாகவும் ஆனால் எந்த பதிலும் இல்லை எனவும் கூறினார்.
இந்நிலையில் மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை இல்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. கர்நாடக அமைச்சர் சிவகுமாருக்கு பதிலளித்து தமிழக அமைச்சர் சி.வி.சண்முகம் எழுதியுள்ள கடிதத்தில் இதை தெரிவித்துள்ளார்.
காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி கர்நாடக அரசு செயல்பட்டுள்ளதால் பேச்சுவார்த்தை இல்லை என்றும் தமிழக அரசு தொடர்ந்துள்ள அவமதிப்பு வழக்கைத் தாமதப்படுத்தவே பேச்சுவார்த்தைக்கு அழைப்பதாகவும் தமிழக அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித் துள்ளார். அவர் மேலும் காவிரி விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பை கர்நாடகா மதிக்க வேண்டும் என்றும் தமிழகத்தின் அனுமதி இல்லாமல் காவிரி நீர்படுகையில் எந்த அணையையும் கட்டக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.