காஞ்சிபுரத்தில் இன்று நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் ”மக்கள் சந்திப்பு” கூட்டத்தில் பேசிய தவெக தலைவர் விஜய், திமுகவினர் பேரறிஞர் அண்ணாவை மறந்து விட்டதாகாவும், கொள்ளை அடிப்பதையே கொள்கையாக வைத்துக் கொண்டு செயல்பட்டு வருவதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தார்.
இந்நிலையில், சென்னை நந்தனத்தில் புதிய தலைமுறைக்கு பேட்டி அளித்த திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன், கரூருக்கு சரியான நேரத்திற்கு வராதது ஏன்? என தவெக தலைவர் விஜய் பதிலளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இது குறித்துப் பேசிய அவர், “ விஜய் கரூரில் 12 மணிக்கு பேசுவதாக கூறிவிட்டு 7 மணிக்கு வந்து பேசினார், குடிக்க தண்ணீர் இல்லாமல் வெயிலில் நின்றதால் மக்கள் மயங்கி விழுந்தனர். விஜய் அதற்கு தற்போது வரை பதில் அளிக்கவில்லை. 10 மணி நேரம் உணவு இல்லாமல் மக்களை வெயிலில் நிற்க வைத்தால் மக்கள் மயக்கம் அடைவார்கள் இது புதிது இல்லை ஏற்கனவே இதை பார்த்துள்ளோம்.
மக்கள் மயக்கம் அடைவதை பற்றி கவலைபடாமல் இருந்தவர் விஜய், அவர் எங்களைப் பற்றி குறை சொல்வதற்கு அருகதை இல்லாதவர். கொள்ளை அடித்ததாக யார் வேண்டும் என்றாலும் பேசலாம். அதற்கு அவர் ஆதரம் தர தயாரா? இது எல்லாம் சும்மா சொல்வது. ஆனால், இவர் செய்த குற்றம் 41 நபர்கள் உயிரை காவு வாங்கியுள்ளது. அதற்கு அவர் இன்னும் பதிலளிக்கவில்லை. தற்குறி என யாரையும் சொல்லவில்லை , விஜயை வேண்டும் என்றால் சொல்லி இருப்பார்கள் காரணம் அவர் பேச்சு பொருத்தமற்றது.
அண்ணாவை நாங்கள் மறக்கவில்லை, அண்ணா சொன்னதை தான் நாங்கள் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். அண்ணா சொன்னதிலிருந்து ஒரு துளி நாங்கள் விலகவில்லை. தற்பொழுது வரை மாநில உரிமைக்காக மத்திய அரசிடம் போராடிக் கொண்டிருக்கிறோம். இதைத்தான் அண்ணா சொன்னார். இதை தற்போதைய முதலமைச்சரும் பின்பற்றி வருகிறார்” எனத் தெரிவித்துள்ளார்.