டி.கே.எஸ். இளங்கோவன்
டி.கே.எஸ். இளங்கோவன் கோப்பு புகைப்படம்
தமிழ்நாடு

'பாஜகவின் கூட்டணியில் 37-வது கட்சியாக அமலாக்கத்துறையை சேர்த்துக் கொண்டார்கள்' - டி.கே.எஸ். இளங்கோவன்

PT WEB

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அமைச்சர் பொன்முடி இல்லத்தில் அவரை சந்தித்தபின் திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ''பெங்களூருவில் நடைபெற்று வரும் எதிர்கட்சிகளின் கூட்டத்தை கண்டு அச்சப்பட்டு ஏதாவது ஒரு வகையில் திமுகவிற்கு தொந்தரவு அளிக்க வேண்டும் என்ற வகையில் செயல்பட்டு வருகின்றனர் பாஜகவினர்.

இந்த வழக்கு 2012ஆம் ஆண்டு தொடுக்கப்பட்ட வழக்கு. அப்போது நீதிமன்றம் பெரிதாக விசாரணை செய்யவில்லை. பொன்முடி இந்த வழக்கு குறித்த பதிவை தன்னுடைய தேர்தல் மனுவில் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு குறித்து மறைப்பதற்கு எதுவும் இல்லை. இந்த வழக்கு குறித்த தகவல் தேர்தல் நேரத்தில் வேட்பு மனு செய்யும் போது கொடுக்கப்படும் அபிடவட்டில் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் நேற்றைக்கு அமலாக்துறையினர் செய்திருப்பது எதிர்கட்சிகளின் கூட்டத்தை திசை திருப்புவதற்காகத்தான்.

அமைச்சர் பொன்முடி

பா.ஜ.க.வினர் 36 கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளனர். 37-வது கட்சியாக அமலாக்கத்துறையை சேர்த்துக் கொண்டு வெற்றிப் பெற நினைக்கிறார்கள். எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை பார்த்து பாஜகவினர் அச்சப்படுவதன் வெளிப்பாடுதான் அமலாக்க துறையின் சோதனை. அமைச்சர் பொன்முடி இந்த விசாரணை குறித்து சிறிதும் கவலைப்படவில்லை. அவருக்கு இந்த வழக்கு குறித்து தெரியும். அமைச்சர் பொன்முடி மகிழ்ச்சியாக இருக்கிறார். அவரைப் பொறுத்தவரை இந்த வழக்கை சந்திக்க தயாராக இருக்கிறார்.

உலகத்திலேயே மிகப்பெரிய ஊழல் கட்சியாக பாஜக உள்ளது. கர்நாடகாவில் 13 சட்டமன்ற உறுப்பினர்களை விலை கொடுத்து வாங்கியவர்கள் பாஜகவினர். அதற்கான பணம் எங்கிருந்து வந்தது? மத்தியப் பிரதேசத்தில் மக்களின் விருப்பத்திற்கு எதிராக பணத்தை வைத்து ஆட்சி அமைத்த பாஜகவிற்கு பணம் எங்கிருந்து வந்தது? பெங்களூரில் நடைபெற்று வரும் எதிர்கட்சிகளின் கூட்டம் பற்றிய முடிவுகள் மக்களுக்கு தெரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் அமலாக்கத் துறையினரை வைத்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது மக்கள் தெளிவாக தெரிந்து கொண்டார்கள். பாஜகவின் அரசியல் காழ்ப்புணர்ச்சி தான் அமலாக்கத்துறையின் சோதனை என்று.

பாஜகவும் கங்கை நதியும் ஒன்றுதான். கங்கை நதியில் குளித்து விட்டால் அவர்கள் பாவம் தொலைந்து விடும். பாஜகவில் சேர்ந்து விட்டால் அவர்கள் ஊழலற்ற கட்சியாக மாறிவிடுவார்கள். கங்கையில் எவ்வளவு அழுக்கு உள்ளதோ அதை அளவிற்கு பாஜகவிலும் உள்ளது'' என்றார்.