தமிழ்நாடு

எதிர்க்கட்சிகள் இருக்கக்கூடாது என நினைப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது - டி.கே.எஸ்.இளங்கோவன்

எதிர்க்கட்சிகள் இருக்கக்கூடாது என நினைப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது - டி.கே.எஸ்.இளங்கோவன்

Sinekadhara

எதிர்க்கட்சிகள் இருக்கக்கூடாது என ஆளும் அரசு நினைப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது என தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன் டெல்லியில் அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

மாநிலங்களவையில் 12 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிராக அவை நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் இன்று புறக்கணித்தனர். இதன் பின்னர் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை தி.மு.க. மாநிலங்களவை குழுத்தலைவர் திருச்சி சிவா, மாநிலங்களவை உறுப்பினர்கள் வைகோ, டி.கே.எஸ். இளங்கோவன் மற்றும் சண்முகம் ஆகியோர் கூட்டாக சந்தித்தனர்.

டி.கே.எஸ் இளங்கோவன், ’’மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் எழுப்பும் ஒவ்வொரு குரலும் மக்கள் பிரச்னைகள்தான். ஆனால் எதிர்க்கட்சிகள் குரல் அவையில் ஒலிக்கக் கூடாது என்பதில் ஆளும் அரசு உறுதியாக உள்ளது. எதிர்கட்சிகள் இருக்கக்கூடாது என ஆளும் அரசு நினைப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது. ஜனநாயகம் மறுக்கப்படும் போது எதிர்கட்சிகள் அவையில் எழுந்து குரல் எழுப்பும் முறையை பாஜகதான் தொடங்கி வைத்தார்கள்; ஆனால் இன்று அதனை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் செய்யும் போது அவை நடவடிக்கையை கெடுப்பதாக கூறுகிறார்கள்’’ எனத் தெரிவித்தார்.

அப்போது திருச்சி சிவா, ’’12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிராக தொடர்ந்து போராடி வருகிறோம். ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய சோதனை வந்துள்ளது. 2 நிமிடங்களில் வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் மசோதாவை நிறைவேற்றினர். அதனை திசை திருப்பும் வகையில் 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ஜனநாயகத்திற்கு எதிரான நாடகத்தை மத்திய அரசு முன்னெடுத்து வருகிறது. இதனை ஊடகங்கள்மூலம் நம்ப வைக்கிறார்கள். பிரச்னைகளில் இருந்து எதிர்க்கட்சிகள் ஓடவில்லை; அவையின் உரிமை தகர்க்கப்படும்போது எதிர்க்கட்சிகளுக்கு ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டிய கட்டாயம் உள்ளது. 12 எம்.பி.க்கள் மட்டும் கடும் குளிரில் வெளியே காத்திருக்கும் சூழலில் நாங்கள் மட்டும் உள்ளே சென்று அவையில் பங்கேற்பது முறையல்ல’’ என்றார்.

அவரைத் தொடர்ந்து பேசிய வைகோ, ’’வேளாண் சட்டங்கள் தொடர்பாக நாடே விழித்து கொண்டபோது பயந்து போய் சட்டங்களை மோடி அரசு திரும்பப்பெற்றது. ஆனால் எதிர்கட்சிகளுக்கு எந்த வாய்ப்பும் கொடுக்காமல் விவாதிக்காமல் சட்டங்கள் திரும்ப பெறப்பட்டது. ஜனநாயக முறையில் எதிர்கட்சிகள் போராடினாலும் அவையை ஒத்தி வைத்துவிட்டு அவர்களுக்கு சாதகமான மசோதக்களை மத்திய அரசு நிறைவேற்றுகிறார்கள். நாடாளுமன்றத்தில் தமிழும் கொல்லப்படுகிறது. ஜனநாயகமும் கொல்லப்படுகிறது. மீண்டும் 12 எம்.பி.க்கள் அவைக்கு வரும்வரை எங்கள் போராட்டம் ஜனநாயக ரீதியாக தொடரும்’’ என்றார்.