தமிழ்நாடு

விவசாய மசோதாவிற்கு அதிமுக ஆதரவளித்தது துரோகம் - டி.கே. ரங்கராஜன்

JustinDurai

விவசாய மசோதாவை எதிர்த்து பாஜக கூட்டணி கட்சி அமைச்சரே பதவியை ராஜினாமா செய்து போராடும் சூழலில், மசோதாவை ஆதரித்து அதிமுக வாக்களித்தது விவசாயிகளுக்கு இழைத்திருக்கும் துரோகம் என்று தெரிவித்துள்ளார் டி.கே. ரங்கராஜன்.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் டி.கே. ரங்கராஜன் தனது ட்விட்டர் பதிவில் கூறுகையில், ''விவசாயத்தை கெடுக்கும் மோடி அரசின் மசோதாக்களை எதிர்த்து இடதுசாரிகளும், விவசாய சங்கங்களும் போராடினோம்.

இப்போது அந்த மசோதாக்களை கண்டித்து அமைச்சர் ஹசிம்ரத் கவுர் ராஜினாமா செய்துள்ளார். பாஜகவின் நீண்ட நாள் கூட்டாளியின் இம்முடிவுக்கு மோடி அரசின் விவசாயி விரோதமே காரணமாகும்.

பாஜகவின் கூட்டணி கட்சி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து போராடும் சூழலில், அந்த மசோதாவை ஆதரித்து அதிமுக வாக்களித்தது. விவசாயிகளுக்கு இழைத்திருக்கும் துரோகமே. பி.ஆர்.நடராஜன் MP உள்ளிட்டு எதிர் கட்சிகள் அந்த மசோதாவின் மக்கள் விரோத தன்மையை கண்டித்து பேசினர். எதிர்த்து வாக்களித்தனர்’’ என்று டி.கே. ரங்கராஜன் தெரிவித்துள்ளார்.