நன்றாக படிக்கும் மாணவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் பரிசளித்த உள்ளிகோட்டை கிராம மக்கள் அவர்களை ஊக்கப்படுத்தினர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாலுகாவில் அமைந்துள்ளது உள்ளிக்கோட்டை என்ற கிராமம். இந்த கிராமத்தில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் சுமார் 800-க்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் பயின்று வருகிறார்கள்.
இந்நிலையில், இந்த ஆண்டு 10, 11, 12ஆம் வகுப்புகளில் நல்ல மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்ற மாணாக்கர்களுக்கு 10 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து அவர்களை அந்த கிராமத்தைச் சேர்ந்த அரசு ஊழியர்களும், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகளும் ஊக்கப்படுத்தினார்கள்.
10, 11, 12ஆம் வகுப்புகளில் முதல் மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் முதல் 10 இடத்தை பிடித்தவர்கள் என மாணாக்கர்களுக்கு 10 லட்சம் ரூபாய் பணம் பகிர்ந்து அளிக்கப்பட்டது. மேலும் அவர்களுக்கு சிறப்பு கேடயங்கள் வழங்கப்பட்டன.
இதில், 10ஆம் வகுப்பில் காவிய தர்ஷினி என்ற மாணவி முதலிடம் பெற்று பணப்பரிசனை தட்டிச் சென்றார் 12 ஆம் வகுப்பில் ஹேமப்ரியா என்ற மாணவி முதல் பரிசை தட்டிச் சென்றார். அதேபோல், 10, 11, 12ஆம் வகுப்புகளில் பயின்ற அத்தனை மாணவர்களுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.
ஒரு கிராமத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் இவ்வாறு மாணவர்களை ஊக்கப்படுத்தியது மாணாக்கர்களின் பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் பெரும் மகிழ்ச்சியை தந்தது.