தமிழ்நாடு

வாயில் மலம் திணித்த விவகாரம் தொடர்பாக அறிக்கை தாக்கல்

வாயில் மலம் திணித்த விவகாரம் தொடர்பாக அறிக்கை தாக்கல்

webteam

திருவாரூரில் பட்டியலினத்தைச் சார்ந்த நபருக்கு வாயில் மலம் திணிக்கப்பட்டதாக எழுந்த புகாரில் தேசிய தாழ்த்தப்பட்ட நல ஆணையத்திடம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் துரை அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள திருவண்டுதுறை கிராமத்தில் வசித்து வரும் பட்டியலினத்தைச் சேர்ந்த கொல்லிமலை என்பவரது வாயில், மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த சக்திவேல், ராஜேஷ், ராஜ்குமார் ஆகிய மூன்று பேர், மலத்தை திணித்தும், சிறுநீரை ஊற்றியும் சாதிய வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. 

இது தொடர்பாக கோட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில்,விசாரணை நடத்திய காவல்துறையினர் சாதிய வன்கொடுமை சட்டம் உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இரண்டு பேரை கைது செய்தனர். மேலும் ஒருவரை காவல்துறையினர் தேடி வந்தனர். 

இந்நிலையில் இந்தப் புகாரில் என்னென்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளீர்கள் எனத் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துரையிடம் விளக்கம் கேட்டு அறிக்கை கோரியிருந்தது.

அதன் அடிப்படையில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் துரை இச்சம்பவத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத்திற்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.