தமிழ்நாடு

திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றம்: பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் தரிசனம்

திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றம்: பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் தரிசனம்

Rasus

திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது. இதனை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பரவசமுடன் கண்டு தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் பல்வேறு வாகனங்களில் உற்சவ மூர்த்திகள் மாட வீதிகளில் வலம் வந்து அருள்பாலித்தனர்.

இந்நிலையில், கார்த்திகை தீபத்திருவிழாவின் முக்கிய விழாவான பரணி தீபம் இன்று அதிகாலை ஏற்றப்பட்டது. அதனையடுத்து 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை உச்சியில் மாலை 6 மணிக்கு மகாதீபம் ஏற்றப்பட்டுள்ளது. இதனை ஏராளமான பக்தர்கள் பயபக்தியுடன் கண்டு தரிசனம் செய்தனர். மலை மீது தீபம் ஏற்றுவதற்காக தீபக் கொப்பரை தலைச்சுமையாக பொதுமக்களால் நேற்று எடுத்துச் செல்லப்பட்டது. 3.5 டன் நெய், 1 டன் எடை கொண்ட திரி மூலம் மகா தீபம் ஏற்றப்பட்டுள்ளது. 

மகா தீபத்தை காண்பதால் வாழ்வில் இருள் விலகி வெளிச்சம் வரும் என பக்தர்கள் கருதுகின்றனர். மலை மீது ஏற நீதிமன்ற உத்தரவின்படி 2,500 பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தீபத் திருநாளை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்துள்ளதால் 2 ஐஜிக்கள் தலைமையில் ஆயிரக்கணக்கான காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.