செய்தியாளர்: துர்கா தேவி சரவணன்
கார்த்திகை தீபத் திருவிழாவில் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, AI தொழில்நுட்பத்துடன் கூடிய முக அடையாளக் கேமராக்கள் (Facial Recognition Cameras) மூலம் குற்றவாளிகளைக் கண்காணிக்கத் திருவண்ணாமலை போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக FRS எனப்படும் AI முக அடையாளக் கேமராக்களை மாவட்டக் காவல்துறை நிறுவியுள்ளது.
கிரிவலப் பாதை மற்றும் முக்கியச் சந்திப்புகளில் பொருத்தப்பட்டுள்ள இந்தக் கேமராக்கள், குற்றப் பின்னணி கொண்ட நபர்களைக் கண்டறிந்து, உடனடியாகக் காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தின் புகழ்பெற்ற ஆன்மிகத் தலங்களில் ஒன்றான திருவண்ணாமலையில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத் திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் பங்கேற்பதற்காகத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
குறிப்பாக, கார்த்திகை தீபத்தன்று திருவண்ணாமலை அண்ணாமலையார் மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுவதைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள். மேலும், பௌர்ணமி நாட்களில் கிரிவலம் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கும்.
இதனால், திருவிழா காலங்களில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவதும், பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதும் காவல்துறைக்கு முக்கியச் சவாலாக உள்ளது.
இதனை முன்னிட்டு, இந்த ஆண்டு கார்த்திகை தீபத் திருவிழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளில் நவீன தொழில்நுட்பத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கிரிவலப் பாதை மற்றும் மாவட்டத்தின் முக்கியச் சந்திப்புகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய FRS (Facial Recognition System) எனப்படும் முக அடையாளக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இதன் மூலம் குற்றச் சம்பவங்களைத் தடுக்கவும், மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் பாதுகாப்பைக் கண்காணிக்கவும் காவல்துறையினருக்கு உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாரம்பரிய ஆன்மிகத் திருவிழாவில் நவீன AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பக்தர்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் இந்த நடவடிக்கை கவனம் பெற்றுள்ளது.