வட ஸ்ரீரங்கம் என அழைக்கப்படும் ஸ்ரீ ரங்கநாதர் கோயிலின் பூட்டை உடைத்து உண்டியலில் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த தேவதானம் கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சாளுக்கிய மன்னர்களால் கட்டப்பட்ட பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ ரங்கநாதர் கோவில் உள்ளது. வட ஸ்ரீரங்கம் என்று அழைக்கப்படும் இங்கு ஸ்ரீரங்கத்தில் உள்ளது போன்றே ரங்கநாதர் சயன கோலத்தில் காட்சி அளிப்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் இங்கு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் வழக்கம்போல் இன்று காலை கோயில் நிர்வாகிகள் கோயிலை திறக்க வந்தனர். அப்போது கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியுற்றனர். உள்ளே சென்று பார்த்த போது உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. மேலும் தடயங்களை மறைக்க கொள்ளையர்கள் அங்கிருந்த சிசிடிவி கேமரா, மற்றும் உபகரணங்களையும் திருடி சென்றுள்ளனர்.
இதையடுத்து கோயில் நிர்வாகிகள் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.