தமிழகத்தில் ஆண்டுதோறும் தமிழ் படங்கள் 200க்கும் மேல் வெளியாகின்றன. மற்ற மொழி படங்கள், 100க்கும் மேல் வெளியாகின்றன. இந்த படங்களுக்கான டிக்கெட் கட்டணத்தில், உள்ளாட்சி அமைப்புகளின் கேளிக்கை வரியாக 8 சதவீதம் வசூலிக்கப்படுகிறது. இதை குறைக்க வேண்டும் என திரைத்துறையினர் கோரிக்கை விடுத்து வந்தனர். அதை பரிசீலனை செய்த தமிழக அரசு, 8 சதவீதம் கேளிக்கை வரியை, 4 சதவீதமாக குறைத்து அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்கு திரைத்துறையினர் தரப்பில் வரவேற்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் கூறுகையில், கடந்த அதிமுக ஆட்சியில் இந்த கேளிக்கை வரியானது அறிமுகப்படுத்தப்பட்டது. அன்று முதல் பல கட்டங்களாக இந்த வரியை நீக்கக்கோரி கோரிக்கை வைத்து வந்தோம். ஆனால் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
ஏற்கனவே 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி இருக்கிறது, அதை சமாளிப்பது பெரும் பாடாக உள்ளது. அவ்வாறு இருக்கும் பொழுது இந்த எட்டு சதவீதம் கேளிக்கை வரி மேலும் எங்களுக்கு அதிக அழுத்தத்தை கொடுத்து வருகிறது. தமிழ்நாடு கேரளாவில் மட்டுமே இந்த கேளிக்கை வரி வசூலிக்கப்படுகிறது. எனவே இதனை குறைக்க பல கட்ட போராட்டங்களை மேற்கொள்ள வேண்டி இருந்தது. இது தொடர்பாக முதல்வரிடமும் துணை முதல்வர் இடமும் செய்தித்துறை அமைச்சர் இடமும் கோரிக்கை மனுக்களை அளித்து இருந்தோம்.
கடந்த முறை முதல்வரை சந்தித்தபோது இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எங்களுக்கு உத்தரவாதம் அளித்து இருந்தார். அந்த வகையில் தற்பொழுது கேளிக்கை வரியை 8 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாக குறைத்து இருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எங்களது கோரிக்கையை ஏற்று வரியை குறைத்த முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
கடந்த 8 ஆண்டு காலமாக டிக்கெட் விலை உயர்த்தாமல் ஒரே நிலையில் இருக்கிறோம். இந்த 8 ஆண்டுகளில் அனைத்து பொருட்களுக்கும் விலை ஏற்றம் நடந்துள்ளது, ஆனால் சினிமா டிக்கெட் மட்டும் விலை ஏறாமல் ஒரே விலையில் இருக்கிறது. ஓடிடி வந்ததன் காரணமாக திரையரங்குகளுக்கு வருபவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. அதனால் திரையரங்குகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதோடு தயாரிப்பாளர்களுக்கும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சொத்து வரி, மின் கட்டணம், தொழில் வரி இவை அனைத்தையும் சமாளித்து திரையரங்கை மூடாமல் நடத்தி வருகிறோம். இந்த சமயத்தில் கேளிக்கை வரி 4 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது ஒரு ஆறுதலை கொடுத்துள்ளது. இதனால் டிக்கெட் கட்டணங்கள் குறைய வாய்ப்பில்லை அதே சமயத்தில் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்களுக்கு நிச்சயமாக ஒரு சிறிய லாபம் கிடைக்கும் என்று கூறியுள்ளார்.