உடுமலையில் வாடகைக்கு வீடு எடுத்து கஞ்சா விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியைச் சேர்ந்த கருப்புசாமி, அருண், அசோக் ஆகிய மூவரும் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தனியார் ஆம்புலன்ஸ் ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளனர். ஆந்திராவில் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் தனது உறவினரை கோவை மருத்துவமனைக்கு கூட்டி வருவதாக ஆம்புலன்ஸ் உரிமையாளரிடம் தெரிவித்துள்ளனர்.
ஆனால் 3 நாட்கள் ஆகியும் ஆம்புலன்ஸை திருப்பிக் கொண்டு வராததால் சந்தேகமடைந்த ஆம்புலன்ஸ் உரிமையாளர் உடுமலை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதனிடையே கோவை போதை தடுப்பு பிரிவு போலீசாருக்கு ஆம்புலன்ஸ் மூலம் சிலர் கஞ்சா கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கருப்புசாமி, அருண், அசோக் ஆகிய மூவரும் ஆந்திர மாநிலம் விஜயவாடா பகுதியில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் கஞ்சா வாங்கி வந்து விற்பனை செய்வது தெரியவந்தது.
விசாரணையில் உடுமலை காவல் நிலையத்திற்கு பின்புறம் அவர்கள் தங்கியிருக்கும் வாடகை வீட்டில் 600 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருப்பதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அருணையும் அசோக்கையும் கைது செய்தனர். முக்கிய குற்றவாளியான கருப்புசாமி தலைமறைவாகிவிட்டார். அவரை தேடும்பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதன் மதிப்பு 70 லட்சம் என போலீசார் தெரிவிக்கின்றனர்.