முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின் கோப்புப் படம்
தமிழ்நாடு

மின்கட்டண பிரச்னை: திருப்பூரில் 2 நாள் பயணம் செய்யும் முதல்வரை சந்திக்க தொழிற்துறையினர் திட்டம்

PT WEB

தொழிற்சாலைகளுக்கு காலை மற்றும் மாலை நேரம் என மொத்தம், 8 மணிநேர மின் பயன்பாட்டுக்கு 'பீக் ஹவர்' என்ற கணக்கில், 15 சதவீதம் கூடுதல் மின்கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, கிலோவாட் கட்டணம் என்ற பெயரில், 430 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் இயங்கினாலும், இயங்காவிட்டாலும், 17,200 ரூபாய் கட்டாயம் செலுத்த வேண்டியுள்ளது.

இப்பிரச்னை குறித்து கடந்த ஓராண்டாகத் தொழிற்துறையினர் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்தும், தீர்வு கிடைக்காததால், தமிழ்நாடு தொழிற்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு சார்பில், திருப்பூர் மாவட்டம், பல்லடம் - காரணம்பேட்டையில் ஒருநாள் கவனஈர்ப்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டத்தில் 2 ஆயிரம் பேர் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து கடந்த, 11ஆம் தேதி முதல், 24ஆம் தேதிவரை, முதல்வருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் துவங்கி நடைபெற்று வருகிறது. மேலும் 25ஆம் தேதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் செய்தும், தொழிற்சாலைகளில் கருப்புக்கொடி கட்டியும் எதிர்ப்பைத் தெரிவிக்க முடிவுசெய்துள்ளனர். இச்சூழலில், 24ஆம் தேதி, காங்கேயத்தில் நடைபெறும், தி.மு.க. பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். இருநாள் பயணமாக முதல்வர் திருப்பூர் வரும் நிலையில், தொழிற்துறையினர் நடத்தும் போராட்டத்திற்கு இடையே, அவர்கள் முதல்வர் ஸ்டாலினை சந்திக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தமிழகத்தின் தொழில் வளர்ச்சியில், பெரும் பங்களிப்பை தந்துகொண்டுள்ள கொங்கு மண்டலத்தில், தொழிற்துறையினர் சந்தித்துவரும் இப்பிரச்னை, வருகிற தேர்தலில் எதிரொலிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.