திருப்பூர் பின்னலாடைகளுக்கு புவிசார் குறியீடு வழங்கினால் பெரும் லாபம் ஈட்ட முடியும் என வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒரு குறிப்பிட்ட பகுதியில் தனித்துவமாக தயாரிக்கப்படும் பொருளுக்கோ அல்லது தனித்துவமாக விளையும் பொருளுக்கோ மத்திய அரசு, புவிசார் குறியீடு வழங்குகிறது. குறிப்பிட்ட உற்பத்தி பொருள் முறையாக பாரம்பரிய ரீதியில் தயாரிக்கப்பட்டதற்கும், தரத்தை காப்பதற்குமான சான்றாகவும் இது பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் திருப்பூர் பின்னலாடைகளுக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் மத்தியில் தொடர்ந்து இருந்து வருகிறது. இந்நிலையில் அவ்வாறு புவிசார் குறியீடு கிடைக்கப்பெற்றால் வணிக ரீதியில் பெரும் பயன் அடைய முடியும் என காப்புரிமை மற்றும் வடிவமைப்பு துறையின் துணை கட்டுப்பாட்டாளர் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் பின்னலாடைகள் உலக அளவில் புகழ் பெற்றுள்ள நிலையில், காஞ்சிபுரம் பட்டுப்புடவைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது போல் புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை உற்பத்தியாளர்கள் மத்தியில் நிலவுகிறது.
தமிழகத்தில் காஞ்சிபுரம் பட்டு, நாச்சியார் கோவில் குத்துவிளக்கு, பத்தமடை பாய் உள்ளிட்ட 28 பொருட்களுக்கு புவிசார் குறியீடு ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளது.