செய்தியாளர்: தி.கார்வேந்தபிரபு
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அடுத்த குறிச்சிகோட்டையைச் சேர்ந்த பள்ளி மாணவி தர்சனா (16), கடந்த 18ஆம் தேதி காணமல் போனதாக தளி காவல் நிலையத்தில் அவரது பெற்றோர் புகார் கொடுத்துள்ளனர். புகாரை தொடர்ந்து காவல்துறையினர் தர்சனாவை தேடி வந்தனர். இந்நிலையில் குறிச்சிகோட்டை அடுத்த மானுப்பட்டி பகுதியில் உள்ள குளத்தில் மூன்று சடலங்கள் மிதப்பதாக பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார் 3 சடலங்களையும் மீட்டனர். அப்போது அதில் ஒரு சடலம் காணாமல் போன தர்சனா என்பது தெரியவந்துள்ளது. மற்ற இரு சடலங்கள் சென்னையைச் சேர்ந்த ஆகாஸ் (19), குறிச்சிகோட்டையைச் சேர்ந்த மாரிமுத்து (20) ஆகியோர் என்பது தெரியவந்துள்ளது. மூவரின் சடலத்தையும் கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
இருசக்கர வாகனத்தில் சென்ற பொழுது மூவரும் நிலை தடுமாறி குளத்தில் விழுந்து இறந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ள நிலையில், இது குறித்து பல்வேறு கோணங்களில் அமராவதி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.