தமிழ்நாடு

திருப்பூர்: குப்பை கொட்டுவதில் பிரச்னை - முன்னாள் சபாநாயகரை முற்றுகையிட்ட பொதுமக்கள்

திருப்பூர்: குப்பை கொட்டுவதில் பிரச்னை - முன்னாள் சபாநாயகரை முற்றுகையிட்ட பொதுமக்கள்

kaleelrahman

திருப்பூர் மாநகராட்சியினர் குப்பைகளை பாறை குழியில் கொட்டி வருவதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு. பாறை குழியை பார்வையிடச் சென்ற முன்னாள் சபாநாயகரும் அவிநாசி சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான தனபாலை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

திருப்பூர் மாநகராட்சி பகுதியில் நாளொன்றுக்கு சுமார் 600 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. இந்த குப்பைகளை திருமுருகன்பூண்டி நகராட்சி பகுதியில் உள்ள பாறை குழியில் கொட்டி வந்தனர். இந்நிலையில், அந்த குழி நிரம்பியதால் அங்கு குப்பைகள் கொட்ட முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் அம்மாபாளையம் பகுதியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான இடத்தில் உள்ள பாறை குழியை தேர்வு செய்து குப்பைகளை கொட்டி வருகின்றனர்.

இந்நிலையில், அம்மாபாளையம், குமரன் காலனி, ராம் நகர், முல்லை நகர், நாராயணசாமி லே-அவுட், எஸ்.என்.ஜி. நகர், சுகம் நெஸ்ட், சொர்ணபுரி வில்லா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்கள் மாநகராட்சி நிர்வாகம் குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அம்மாபாளையம் பேருந்து நிறுத்தம் பகுதியில் 2000-க்கும்; மேற்பட்ட பொதுமக்கள் கடந்த 12-ம் தேதி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து அம்மாபாளையம் பகுதியில் உள்ள பாறை குழியை பார்வையிட வந்த முன்னாள் சபாநாயகரும், அவிநாசி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தனபாலை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டனர். இந்த பாறை குழியில் கழிவுகள் கொட்டுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதையடுத்து பொதுமக்களிடம் பேசிய தனபால், வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் இந்த பிரச்னை குறித்து கேள்வி எழுப்புவேன் என்று கூறினார்.

இதைக் கேட்டு சாமாதானம் அடையாத பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தியதால் அப்போதே திருப்பூர் மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு பேசினார். அதற்கு மாவட்ட ஆட்சியர், மாற்று இடம் கிடைக்கும் வரை இப்பகுதியில் குப்பைக் கொட்டப்படும் என்று கூறியுள்ளார். மேலும்,அங்கு கூடியிருந்த பொதுமக்கள் இதனை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து பல கேள்விகள் கேட்டுள்ளனர். அதற்கு எந்த பதிலும் அளிக்காத தனபால் காரில் ஏறி சென்றுவிட்டார்.

இந்த சம்பவத்தின் போது அங்கு குப்பைகளை கொட்ட வந்த மாநகராட்சி குப்பை லாரிகளையும் பொதுமக்கள் சிறைபிடித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. திருமுருகன்பூண்டி போலீசார் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்துபோகச் செய்தனர்.