தமிழ்நாடு

திருப்பூர்: சூட்கேஸில் பெண் சடலம் - கொலையாளிகளை கண்டறிவதில் தொடரும் சிக்கல்

kaleelrahman

திருப்பூரில் சூட்கேஸில் சடலமாக கிடந்த பெண். கொலையாளிகளை நெருங்குவதிலும், உயிரிழந்த பெண் யார் என கண்டறிவதிலும் தற்போது வரை சிக்கல் நீடிக்கிறது.

கடந்த 7 ஆம் தேதி திருப்பூர், தாராபுரம் ரோட்டில், புதுநகர் பகுதியில் கால்வாயில் கேட்பாரற்று சூட்கேஸ் ஒன்று கிடந்துள்ளது. இதையடுத்து அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து சூட்கேஸை சோதனை செய்ததில் அதில் பெண் சடலம் இருந்தது தெரியவந்தது. உடனடியாக உடலை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த காவல்துறையினர் 5 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகள் யார்? கொலை செய்யப்பட்ட பெண் யார்? என்று விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் கொலையானவர் யார்; எந்த ஊரை சேர்ந்தவர் என தெரிந்தால், கொலையாளியை எளிதாக நெருங்கிவிட முடியும் என காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. கொலையான பெண், வடமாநிலத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அவர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர், இங்கு ஏதேனும் பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்தாரா என்கிற தகவல்களை திரட்டி வருகின்றனர்.

அதேபோல், ஆடை உற்பத்தி நிறுவனத்தினர், தொழில் அமைப்பினர், வடமாநில தொழிலாளரை பணி அமர்த்தும் ஏஜென்டுகளுக்கும், போலீஸ் தரப்பில் விவரங்கள் பகிரப்பட்டுள்ளன. நேற்றைய தினம் அந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி புகைப்படம் வெளியானது. ஞாயிற்றுக்கிழமை இரவு பதிவான அந்த காட்சிகளில் , இரு இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் அந்த சூட்கேஸை வைத்து கொண்டு செல்வது தெரியவந்துள்ளது.

அதனால் திருப்பூர் பகுதிக்குள் தான் கொலை நடந்திருக்க கூடும் என காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர். இருந்தபோதும் கொலையாளிகளை கண்டறிவதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது.