தமிழ்நாடு

திருப்பூர்: அரசு பள்ளியில் 3 மாணவர்களுக்கு கொரோனா உறுதி

webteam

திருப்பூர் மாவட்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில்  3 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கின் காரணமாக, கடந்த மார்ச் மாதம் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டன. அதன் பின்னர் சூழ்நிலைகளுக்கு ஏற்ப தளர்வுகளை அறிவித்த அரசு, கடந்த 19-ஆம் தேதி முதல் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகளை கொரோனா கட்டுப்பாடுகளுடன் செயல்படுத்தலாம் என உத்தரவிட்டது. அதனைத்தொடர்ந்து 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

மாவட்ட சுகாதாரத் துறை சார்பில் பள்ளி செல்லும் மாணவ மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருப்பூர் மாவட்டம் முத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 22 , 23 , 24 ஆகிய தேதிகளில் பள்ளிக்கு சென்ற 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்கள் 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 3 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 12 வகுப்பு பயிலும் 2 மாணவர்கள் மற்றும் 1 மாணவி என 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு அவர்கள் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ் அவர்களிடம் கூறும்போது, “பரிசோதனை முடிவில் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மாணவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். பள்ளி முழுவதும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டு , அந்த 3 மாணவர்கள் பயன்படுத்திய வகுப்பறைகள் 1 வார காலத்திற்கு யாரும் பயன்படுத்தாத வகையில் மூடி வைக்கப்படும். அரசின் அறிவுரைப்படி ஏற்பாடுகள் செய்யப்பட்டு  மற்ற மாணவர்களுக்கு வேறு வகுப்பறைகளில் வகுப்புகள் எடுக்கப்படும். பள்ளி தொடர்ந்து செயல்படும்” என்றார்.