தமிழ்நாடு

பாப்பாள் விவகாரத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க ஆணை

பாப்பாள் விவகாரத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க ஆணை

webteam

திருப்பூர் அருகேயுள்ள பள்ளியில் பணியாற்றும் சமையலர் பாப்பாளை, பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் திருமலைக்கவுண்டன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த பாப்பாள் என்பவர் சமையலராக நியமிக்கப்பட்டார். அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர் சமைத்தால் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என அப்பகுதியைச் சேர்ந்தோர் எதிர்ப்பு தெரிவித்ததால், பாப்பாள் வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டார். பின்னர் இந்த விவகாரம் சர்ச்சையைக் கிளம்பியதால் மீண்டும் அதே பள்ளியில் பணியமர்த்தப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக பாப்பாள் சார்பில் கோவையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பன்னீர்செல்வம், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் முறையிட்டடார். 

இது தொடர்பாக மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆகியோர் ஆஜராகி ‌விளக்கமளித்தனர். வழக்கை விசாரித்த தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர் முருகன், சமையலர் பாப்பாளை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். பாப்பாளை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாட்சி மீது, எஸ்.சி, எஸ்.டி, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவும் ஆணையிட்டார். மேலும் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.